india

img

சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: பெண்கள் ஏன் இரவில் வெளியே வந்தார்கள் என்ற பாஜக முதல்வரின் பேச்சால் சர்ச்சை

இரவு நேரங்களில் பெண்கள் ஏன் வெளியில் செல்கிறார்கள் என்ற, பாஜக முதலமைச்சர் பிரமோத் சாவந்தின் சர்ச்சைக்குரிய பேச்சிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

கோவா தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 30 கி.மீ தெற்கே பெனாலிம் என்ற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் 4 பேர் கொண்ட கும்பலால் 2 சிறுமிகள் பாலில் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கோவா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இந்த பிரச்சனை கோவா சட்டமன்றத்தில் கடுமையாக எதிரொலித்தது.

ஆளும் கட்சியில் செல்வாக்கு உள்ள எம்.எல்.ஏ ஒருவர் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாகக் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் சட்டசபையில் தற்போது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.  

அதில், பெனாலிம் கடற்கரையில் நடந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகச் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று நாம் நேரடியாக காவல்துறையினரைக் குற்றம் சாட்டுகிறோம். சிறுமிகள் இரவு முழுவதும் ஏன் கடற்கரையில் தங்கி இருந்தார்கள். பெற்றோர்களின் குரலுக்குக் குழந்தைகள் செவிசாய்ப்பதில்லை. எனவே அரசும், காவல் துறையும் இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்க முடியாது என்று கூறியுள்ளார். 

மேலும், பெற்றோர்கள் பதின்ம வயதில் உள்ள சிறுவர்களை இரவில் வெளியே அனுப்பக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதலமைச்சரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இதுபோன்ற அறிக்கைகளை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் வெளியிடுவது வெறுக்கத்தக்கது என்றும்,  குடிமக்களின் பாதுகாப்பு என்பது காவல்துறை மற்றும் மாநில அரசின் பொறுப்பாகும். அரசால் அதை வழங்க முடியாவிட்டால், முதல்வர் பதவியில் அமர தகுதி இல்லை என்று கோவா பார்வர்டு கட்சி எம்.எல்.ஏ விஜய் சர்தேசாய் கடுமையாகச் சாடியுள்ளார்.  

பாதுகாப்பு இல்லை என்று கூறி இரவில் தங்கள் குழந்தைகளை வெளியே செல்ல அனுமதித்ததற்காக முதலமைச்சர் பெற்றோரைக் குற்றம் சாட்டுவது அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதிப்படுத்த முடியாவிட்டால், அதை யார் கொடுக்க முடியும். பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்ந்த வரலாறு கோவாவுக்கு உள்ளது. இந்த வரலாற்றை தற்போது பாஜக ஆட்சியில்   கோவா இழந்துள்ளதாகச் அம்மாநிலத்தின் சுயேச்சை எம்.எல்.ஏ ரோஹன் கவுண்டே என்பவர் தெரிவித்துள்ளார். 

 

;