உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிர்ச்சியளிக்கிறது.
இடிபாடுகளில் சிக்கிய அனைவரையும் அரசு துரிதமாக மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அறிவியலாளர்களின் எச்சரிக்கைகளுக்கு மாறாக சூழல் கூருணர்வு மிக்க பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
நிலச்சரிவு அபாயமிக்க பகுதிகள், ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை மேலும் அனுமதிக்கக் கூடாது.
காலநிலை மாற்றம் கொண்டு வரும் பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.