india

img

6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்காத காவல்துறை.... சித்திக் கப்பான் மீதான நடவடிக்கையை ரத்து செய்த மதுரா நீதிமன்றம்....

மதுரா:
ஹத்ராஸின் அமைதியை சீர்குலைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பான் மற்றும் மூன்றுபேர் மீதான நடவடிக்கைகளை கைவிடுவதாக மதுரா நீதிமன்றம் செவ்வாய்க் கிழமை அறிவித்துள்ளது.

இந்த மூன்று பேருக்கும் எதிரான விசாரணையை காவல்துறை ஆறு மாத காலத் திற்குள் முடிக்கவில்லை என்ற- குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.உ.பி. மாநிலம் ஹத்ராஸில் கடந்த 2020அக்டோபரில், தலித் இளம்பெண் பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். இதையொட்டி, கேரளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரான சித்திக் கப்பான் செய்தி சேகரிப்புக்காக ஹத்ராஸ் சென்றார். பல உண்மைகளையும் வெளிக்கொண்டு வந்தார். 
இந்நிலையில், சித்திக் கப்பான் மற்றும் அவருடன் வந்திருந்த அதிகுர்ரஹ்மான், ஆலம், மசூத் ஆகியோர் ஹத்ராஸின் அமைதியை சீர்குலைத்ததாக கூறி, சிஆர்பிசி 151, 107, 116 ஆகிய பிரிவுகளில்உ.பி. காவல்துறை வழக்கு பதிவு செய்தது.பின்னர் தேசத் துரோகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (UAPA) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளிலும் (153A, 295A, 124A, 120B, யுஏபிஏ (UAPA) 17/18) உ.பி. பாஜக அரசு வழக்கு பதிவு செய்தது. 

இந்நிலையில்தான், அமைதியை சீர்குலைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், பிரிவு 116 (6) சிஆர்பிசியின் கீழ் விசாரணை நடவடிக்கைகளை முடிப்பதற்கான வரம்பு காலாவதியானதால், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் எதிரான நடவடிக்கைகள் கைவிடப்படுவதாக மதுரா நீதிமன்ற மாஜிஸ்திரேட் ராம் தத் ராம் அறிவித்துள்ளார்.