articles

img

கைப்பேசி-கோவி.பால.முருகு - சிறுகதை

கைப்பேசி-கோவி.பால.முருகு - சிறுகதை

அன்றைய காலைக் கூட்டம் முடிந்து தலைமை ஆசிரியர் அறைக்குப் போய் தன் இருக்கையில் அமர்ந்தார்.அப்போது ஒரு மாணவன் தலையை மட்டும் நீட்டி உள்ளே பார்த்தான்.”டேய்...என்ன எலி பொந்துலேர்ந்து எட்டிப் பாக்குறா மாதிரி பாக்குற,உள்ள வா..இங்க பூனை இல்லை”என்று எப்போதும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் நகைச்சுவையாகப் பேசும் தலைமையாசிரியர் பாலன் அழைத்தார். மெதுவாக உள்ளே வந்தான். 

”என்னடா…கிட்ட வா…என்ன செய்தி? காலை யிலேயே உங்க பஞ்சாயத்த ஆரம்பிச்சுட்டீங்களா?” என்றார் .”அய்யா ஒரு செய்தி..நான் சொன்னதா சொல்லிடாதீங்க என்ன கரவம் கட்டி அடிப்பானுங்க”. ”சரி…நான் சொல்லல.உன் பேரு என்ன?எந்த வகுப்பில படிக்கிற?என்ன செய்தி அதச் சொல்லு” “அய்யா…நான் ஆறாம் வகுப்பு பி செக்‌சன்ல படிக்கிறேன்.என் பேரு வேல்முருகன். எங்க வகுப்பில்  படிக்கிற வெங்கடேசன்  விலை உயர்ந்த  புது செல்ஃபோன் வச்சிருக்கான். அவன சுத்தி நிறைய  பேரு அதுல எதையோ பார்த்துக்கிட்டு இருக்கான்க..  அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் சில பேரைத்தான் பார்க்க அனுமதிக்கிறான். அநேகமா அதில அவன்க நல்ல விஷயத்தப் பாக்குறதா தெரியல.  மறஞ்சி மறஞ்சி யாருக்கும் தெரியாம பாக்குறானுங்க.  அதைச் சொல்லத்தான் வந்தேன் அய்யா” என்றான். “ஓஒ….அப்படியா…சரி நீ போ..நான் பாத்துக்கி றேன்”.பள்ளி  துவங்கி இரண்டாம் பிரிவு வேளை நடந்து கொண்டிருந்தது.இருக்கையிலிருந்து எழுந்தவர்  அந்த வகுப்பை நோக்கி நடந்தார்.

அப்போது பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை நளினியிடம்” டீச்சர்…கொஞ்சம் வேலை இருக்கு நீங்க போயிட்டு அரை மணி நேரம் கழித்து வாங்க என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார். தம்பிகளா…இதுல வெங்கடேசன் யார் என்றார். வெங்கடேசன் எழுந்து நின்றான். எழுந்து நின்றவன் எதோ ஆபத்து நமக்கு வரப்போகிறது என்பதைத் தெரிந்து கொண்டான்.முகத்தில் பயத்தின் அறிகுறி தெரிந்தது. தலைமையாசிரியர் நேராகச் சென்று வெங்க டேசனுடைய பையை எடுத்துக் கொண்டு வந்தார்.பையைத் திறந்து பார்த்தபோது விலை உயர்ந்த சாம்சங் கேலக்சி மாடல் கைப்பேசி இருப்பதைப் பார்த்தவர் வெளியே எடுக்காமல் பையைக் கையில்  எடுத்துக் கொண்டு “வெங்கடேசா என்னோட வா” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார். தலைமை  ஆசிரியர் பின்னே பயந்து கொண்டே நடுக்கத்தோடு என்ன ஆகப்போகிறதோ! என்ற அச்சம் தொற்றிக்  கொள்ள கையைக் கட்டிக் கொண்டே பின்னே  சென்றான்.அவனோடு சேர்ந்து படம் பார்த்த வர்களுக்கும் பயம் தொற்றிக் கொண்டது.

தன்னுடைய அறைக்குச் சென்ற தலைமை ஆசிரியர் வெங்கடேசன் பையிலிருந்து கைப்பேசியை எடுத்தது அவனிடம் விசாரிக்க ஆரம்பித்தார்.”சரி…இந்த ஃபோன் யாருது?”ஐயா..இது என்னோட ஃபோன் இல்ல, வேற ஒரு அண்ணனோட ஃபோன். நான் வீடியோ கேம் விளையாட அதுகிட்ட வாங்கிக்கிட்டு வந்தேன்.”என்றான்.”இன்னக்கித்தான் வாங்கிக்கிட்டு வந்தியா?”என்றார்.”ஆமாம் அய்யா”என்றான் வெங்கடேசன்.அப்போதே அவன் பொய் சொல்கிறான் என்பது புரிந்து போயிற்று. “டேய்….ஏன் பொய் சொல்ற? ஒரு வாரமா இந்த  செல்ல வச்சிகிட்டு எல்லா பசங்களோடயும் படம் பாத்துருக்க.சரி உங்க அப்பா ஃபோன் நம்பர கொடு” ”அய்யா…எங்க அப்பா இறந்துட்டாருய்யா..எங்க  அம்மா நான் நல்லா படிக்கணும்னு எங்க மாமா  வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.இப்ப மாமா வீட்டில இருந்துதான் படிக்கிறேன்” “சரி…உங்க மாமா என்ன பண்ணுறாரு?அவரோட நம்பரக் கொடு”என்றார் தலைமை ஆசிரியர். பயந்து கொண்டே மாமா எலக்ட்ரிக் மெக்கானிக் கடை வச்சியிருக்காரு என்றவன் அவரின் கைப்பேசி  எண்ணையும்  கொடுத்தான்.அந்த எண்ணுக்குப் ஃபோன் செய்தார் “ஹலோ…யாருங்க?” என்றவ ரிடம்.நான் விகேஜி மேல்நிலைப் பள்ளியின் தலைமை  ஆசிரியர் பேசுறேன்.நீங்க உடனடியா பள்ளிக் கூடத்துக்கு வந்து என்ன பார்க்கணும்.ரொம்ப முக்கியம் உடனே வரணும்”என்றார். பதறிப்போன வெங்கடேசனின் மாமா “சார்..என்ன செய்தி ஏதாவது பிரச்சனையா?” என்றார். ஒன்னும் பயப்பட  வேண்டாம் நேரில் வாங்க பேசிக் கொள்ளலாம்”என்று சொல்லிவிட்டு ஃபோனைத் துண்டித்துக் கொண்டார். அடுத்த பதினைந்து நிமிடத்தில் வெங்கடேசனின் மாமா வந்துவிட்டார். வந்தவர் தலைமை ஆசிரியர் பக்கத்தில் தன் அக்கா மகன் வெங்கடேசன் நிற்பதைப்  பார்த்துவிட்டு, எதோ பிரச்சனை என்ன பண்ணு னான்னு தெரியலயே!என்ற கவலையோடு ”அய்யா… என்ன செய்திங்கையா?”என்றார். மேசைமீது வைத்திருந்த கைப்பேசியை எடுத்து அவரிடம் கொடுத்தவர்”இது இவனோட பையில  இருந்தது.இது யாருடையது?என்று கேட்டால் ஒரு அண்ணனோட செல்லுங்கிறான்.அது  உண்மையில்ல..இந்த செல்லில எந்த தொடர்பு எண்ணும் இல்லை.

அதோட…இங்க கிட்ட வாங்க”  என்றவர் அவரிடம் கொடுத்த செல்லை வாங்கி  அதன் உள்ளே இருக்கும் சில படங்களையும், வீடியோவையும் காண்பித்தார்.பார்த்த வெங்கடேச னின் மாமா முகம் வெளிறிப் போயிற்று.திடீரென்று பாய்ந்து வெங்கடேசனை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். “தம்பி…நிறுத்துங்க..உங்கள நம்பி படிக்க அனுப்பியிருக்காங்க..நீங்க அவன் நடவடிக்கையைக் கவனிக்க வேண்டாமா?சரி…இந்த செல்லின் விலை பதினான்காயிரம் என்கிறார்கள்.இவ்வளவு பணம் எப்படி இவனுக்குக் கிடைத்தது?”என்றதும் வெங்கடேசனைப் பார்த்து மரியாதையா எல்லா உண்மையையும் ஒன்னுகூட மறைக்காம சொல்ல ணும்”என்றார்.அடி வாங்கியதில் நிலை குலைந்து போயிருந்த வெங்கடேசன்.உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்தான். அப்போது தலைமையாசிரியர் சந்தேகத்தோடு வெங்கடேசனை அருகில் இழுத்து அவனுடைய பேண்ட் பையில் கையை விட்டுத் துழாவினார்.கத்தை யாக தாள்கள் தட்டுப்பட்டது.வெளியே எடுத்தால் அத்தனையும் நூறு ரூபாய் நோட்டுகள்.எண்ணிப் பார்த்ததில் மூவாயிரம் ரூபாய் இருந்தது.இப்போது வெங்கடேசன் மாமாவிற்கு தலையே சுற்ற ஆரம்பித்தது.மீண்டும் அடிக்கப் போனவரைத் தடுத்து “வெங்கடேசா…இந்தப் பணம் உனக்கு எப்படிக்  கிடைத்தது”என்றார் தலைமையாசிரியர். இனி எதையும் மறைக்க முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட வெங்கடேசன்” கடையிலேர்ந்து எடுத்தது” என்றான். அப்படியா…? என்னங்க கடயிலேர்ந்து எடுத்தேங்கிறான். பதினைந்தாயிரம் அளவுக்கு எடுத்துருக்கான் உங்களுக்குத் தெரி யாதா?ஆச்சரியமா இருக்கே”என்றவர் வெங்க டேசனைப் பார்த்து “இவ்வளவு பணம் உனக்கு எப்படிக் கிடைத்தது என்பதை மறைக்காமல் சொல்”என்றார். “அய்யா..மாமா கடையில் எலக்ட்ரிக்கல் சர்வீசோடு உதிரி பாகங்களும் இருக்கும்.ஒரு நாளைக்குக் குறைந்தது பத்தாயிரம் ரூபாய் வியா பாரம் ஆகும். நான் கடையில் இருக்கும் போதெல்லாம்  ஆயிரம் இரண்டாயிரம் என்று எடுத்துக் கொள்வேன்” என்றான்.இதைக் கேட்ட அவனுடையா மாமா “அய்யா  இவன நான் ரொம்ப நம்புனேன்.

அவ்வளவு மரியாதை யாகவும்,அடக்கமாகவும் இருப்பான்.இப்பக்கூட என்னால நம்ப முடியல. நான் பள்ளிக்கூட விடுமுறை  நாளில் இவனைக் கடையைப் பார்த்துக்கச் சொல்லிட்டு கொஞ்சம் வெளி வேலையைப் பார்க்கப்  போயிடுவேன். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை எடுத்திருக்கான்” என்றார். “சரி…இந்த செல்ல எங்க வாங்குன? இதுல இருக்கிற படம்,வீடியோ எல்லாம் யார்  செல்லில் ஏற்றிக் கொடுத்தது? என்று கேட்டார் தலைமை ஆசிரி யர். குறுக்கு சாலையில் ஒரு கடை இருக்கு. அங்கதான்  இதை வாங்கினேன்.பக்கத்தில் இருக்கும் கம்ப்யூட்டர் சென்டரில்  இதை ஏற்றிக் கொடுத்தார்கள்.அதற்காக ஐநூறு ரூபாய் வாங்கிக் கொண்டார் என்றான். “தம்பி..உன்ன நம்பி அவுங்க அம்மா விட்டிருக்காங்க, அப்பா இல்லாத பையன். நீ இப்படி அலட்சியமா இருந்தா எப்படி?இனிமேலாவது இவனு டைய நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்”என்று சொல்லிவிட்டு கைப்பேசியை வெங்கடேசன் மாமா கையில் கொடுத்து அனுப்பினார். பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்  ஒரு நாள் வீட்டின் அழைப்பு மணி ஒலி கேட்டு வெளியே  வந்தார்.

ஆஜானுபாகுவாக ஒரு இளைஞன் நின்று  கொண்டிருந்தான்.”தம்பி..நீங்க…”என்று இழுத்தார் தலைமையாசிரியர். ”அய்யா என்னைத் தெரியலயா?நான் தான் வெங்கடேசன்”என்றதும் அவனைப் பற்றிய நினைவு வந்துவிட்டது.உள்ளே அழைத்து வந்து நாற்காலியில் அமரச் சொன்னார்.மறுத்தான், பிடிவாதமாக அமர வைத்தவர். ”அப்புறம் எப்படியிருக்கே? என்ன பண்ணிகிட்டு இருக்கே?” என்றார். அய்யா.. அன்னிக்கி மட்டும் நீங்க அதக் கண்டு பிடிக்கலேன்னா என்னோட வாழ்க்கையே திசைமாறிப் போயிருக்கும்.அன்றைக்கு நடந்த சம்பவம் எங்க அம்மாவுக்கெல்லாம் தெரிஞ்சிபோச்சி.எனக்கு அவமானமா போயிட்டுது.அன்றையிலேர்ந்து முழுவதும் மாறிவிட்டேன்..இப்போது கம்புயூட்டர் இன்ஞினியரிங் படித்து விட்டு ஒரு சாஃப்ட் வேர் கம்பெனியில ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறேன்.சொந்தமாக சென்னையில் வீடு வாங்கிவிட்டேன். இது எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான் என்றவன் கையில் வைத்திருந்த பழங்கள்,இனிப்பு,காரம் அடங்கிய பையைக் கொடுத்துவிட்டு காலில் விழுந்தான்.”தம்பி காலில் விழுவது எனக்குப் பிடிக்காது மரியாதையைச் செயலில் காட்ட வேண்டும்,இப்போது நீ முன்பு சொன்னாயே அதுவே எனக்குப் பெரிய மகிழ்ச்சி”ஓய்வு பெற்று  பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு பாராட்டு கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்து போனார் தலைமை யாசிரியர்.