அலகாபாத்:
ஆக்சிஜன் இல்லை என்ற காரணத்திற்காக நோயாளிகளை சாக விடுவது, கிரிமினல் குற்றம் என்று உத்தரப்பிரதேச பாஜக அரசை, அலகாபாத்உயர் நீதிமன்றம் மிகக் கடுமையாக சாடியுள்ளது. மேலும் இது இனப்படுகொலைக்கு ஒப்பானது என்றும் கூறியுள்ளது.
பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப் பிரதேசத்தில், மொத்தம் 13 லட்சத்து 13 ஆயிரத்து 361 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இதுவரை 13 ஆயிரத்து 162 பேர் இறந்துள்ளனர். போதியமருத்துவ வசதி, படுக்கை, குறிப்பாகஆக்சிஜன் கிடைக்காததே இவர்களின்மரணத்திற்கு காரணம் என்று குற்றச் சாட்டு எழுந்துள்ளது. அண்மையில், மீரட் மருத்துவக் கல்லூரியின் ஐசியு-வில் 5 நோயாளிகள் மரணமடைந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது. அதே போல்லக்னோ கோமதி நகர் சன் மருத்துவமனை மற்றும் பிற தனியார் மருத்துவமனைகள் ஆக்சிஜன் விநியோகம் இல்லாததால் கொரோனா நோயாளிகளையே புறக்கணிக்கும் போக்குகள் இருப்பதும் சமூக ஊடகங்களில் வெளியானது.இந்நிலையில்தான், மீரட் மற்றும் லக்னோ மாவட்டங்களில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறப்பது தொடர்பான வழக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகளைச் சாக விடுவது கிரிமினல் குற்றம் என்று நீதிபதிகள் சித்தார்த் வர்மா, அஜித் குமார் அமர்வு கடுமையாக விமர்சித்துள்ளது. உயர் நீதிமன்றஅமர்வு இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:
‘ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்ற ஒரு காரணத்தினால் கொரோனாநோயாளிகள் மரணமடையும் நிலையை நாங்கள் துயரத்துடன் பார்க்கிறோம். அத்துடன், மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை விநியோகம் செய்யாமல் இருப்பதை,கிரிமினல் குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு சற்றும் குறையாத குற்றமாகவே நாங்கள் கருதுகிறோம்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதய மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் மூளை அறுவை சிகிச்சைகள் நடைபெறும் அளவிற்கு, அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ள இந்த யுகத் தில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறப்பதை எப்படி நம்மால் சகித்துக் கொள்ள முடியும்?
சமூக வலைத்தளங்களில் மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் குறித்து வரும் விமர்சனங்களை வைத்து, பொதுவாக நாங்கள் எந்தஉத்தரவுகளையும் பிறப்பிப்பதில்லை. ஆனால், இந்த பொதுநலவழக்கின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் சமூக ஊடக செய்திகளின் உண்மைத் தன்மையை நம்புகின்றனர். போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பதாக அரசாங்கத்தால் கூறப்படும் தகவலுக்கு மாறாக, சமூக வலைதளங்களில் இப்போது வெளியாகும் புகைப்படங்கள் உள்ளன.
எனவே, இதற்கு உடனடியாக தீர்வுகாணுமாறு அரசுக்கு உத்தரவிடுகிறோம். ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் குறித்து லக்னோ, மீரட் நிர்வாகம் உடனடியாக விசாரிக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், லக்னோ, மீரட் மாவட்டஆட்சியர்களும் அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.