india

img

மாடுகளுக்காக மனிதர்களைத் தாக்குவது இந்துத்துவாவிற்கு எதிரானது... ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வாய்ஜாலம்...

காஜியாபாத்:
பசு புனிதமான விலங்கு என்றாலும், மாடுகளுக்காக மனிதர்கள் மீதுதாக்குதல் நடத்துவது இந்துத்துவா கொள்கைக்கு எதிரானது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் திடீர் உபதேசம் செய்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் குவாஜா இப்திகார் அகமதுஎழுதிய ‘தி மீட்டிங் ஆப் மைண்ட்ஸ்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆர்எஸ்எஸ்-ஸின் முஸ்லிம்பிரிவான ‘ராஷ்ட்ரிய முஸ்லிம் மஞ்ச்’இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில், பங்கேற்றுப் பேசுகையில்தான், மோகன் பகவத் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பெரும்பான்மை சமூகத்தினர் என்ற அச்சம் இந்தியாவில் அதிகரிக்கிறது. ஆனால், இந்தியாவில் இஸ்லாம் மதம் ஆபத்தில் இருப்பதாக முஸ்லிம்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். ஏனெனில், நாட்டில் இந்துக்கள் அல்லது முஸ்லிம்களின் ஆதிக்கம் என்பது ஒருபோதும் இருக்க முடியாது. நாம் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். இந்தியர்களின் ஆதிக்கம் என்பது மட்டுமேஇருக்க முடியும். கடந்த 40,000 ஆண்டுகளில் இருதரப்பினரும் ஒரே மூதாதையரின் சந்ததியினர் என்பது நிரூபிக்கப்பட்டுள் ளது. உங்கள் முன்னோர்களை இந்துக்கள் என அழைக்க விரும்பாவிட்டால், இந்தியர்கள் என அழையுங்கள். தேசியவாதம் என்பது ஒற்றுமையின் அடிப்படையாக இருக்க வேண்டும். இந்திய மக்களுக்கு ஒரே டி.என்.ஏ தான் உள்ளது.

அரசியல் கட்சிகளால் மக்களைஒன்றிணைக்க முடியாது. அரசியல்என்பதும் மக்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு கருவியாக மாற முடியாது, ஒருவேளை ஒற்றுமையை சிதைப்பதற்கான ஒரு ஆயுதமாக மாறலாம்.கும்பல் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் இந்துத்துவா கொள்கைக்கு எதிரானவர்கள். எந்த ஒரு முஸ்லிமும் இங்கு வாழக்கூடாது என்று ஒருஇந்து சொன்னால், அந்த நபர் இந்துஅல்ல. பசு ஒரு புனித விலங்குதான். ஆனால், அதற்காக பசுக் காவலர்கள் என்ற பெயரில் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவது இந்துத்துவத்திற்கு எதிரானது. அவ்வாறு தாக்குபவர்கள் மீது எந்தவொரு பாகுபாடும் காட்டாமல் சட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு முஸ்லிம் இங்கே வாழக்கூடாது என்று சொல்லும் இந்து இந்துவே அல்ல!சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நேரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு முஸ்லிம்கள் பற்றி அதிகம் கவலைப்படுகிறது, வாக்கு வங்கி அரசியலுக்காகச் செயல்படுகிறது என்று சிலர் பேசலாம்.

ஆனால், சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகள் நடக்கும் போது, பெரும்பான்மை மக்களிடம் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் குரல் எழ வேண்டும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் நாட்டின் வளர்ச்சி சாத்தியம். ஒற்றுமையின் அடிப்படை என்பது தேசியவாதமும், நம்முன்னோர்களின் புனிதமும்தான். இந்து - முஸ்லிம் பிரச்சனைகளை தீர்ப்பது என்பது பேச்சுவார்த்தை மூலம்தான் முடியும்.இவ்வாறு மோகன் பகவத் பேசியுள்ளார்.