india

img

இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.22.20 கோடி அபராதம்! - சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

விதிமுறைகளை மீறியதற்காக இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.22.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரை (SVP) பொறுப்பிலிருந்து நீக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் சு.வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 2025-இல் இண்டிகோ (IndiGo) விமான நிறுவனம் மேற்கொண்ட பெருமளவிலான விமான ரத்துகள் மற்றும் காலதாமதங்கள் குறித்து மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் நாயுடு அளித்துள்ள பதிலை சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "கடந்த டிசம்பர் 2025-இல் இண்டிகோ (IndiGo) விமான நிறுவனம் மேற்கொண்ட பெருமளவிலான விமான ரத்துகள் மற்றும் காலதாமதங்கள் குறித்து மக்களவையில் சு. வெங்கடேசன் எம் பி எழுப்பிய  கேள்விக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விரிவான பதிலளித்துள்ளது.  
6,890 விமானங்கள் ரத்து: பின்னணி என்ன?
டிசம்பர் 2025 மாதத்தில் மட்டும் இண்டிகோ நிறுவனம் மொத்தம் 6,890 விமானங்களை ரத்து செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதற்குப் பின்வரும் காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன:  
• விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் காணப்பட்ட அதிகப்படியான மேலாண்மை (Over-optimisation).  
• மென்பொருள் ஆதரவு மற்றும் மேலாண்மை கட்டமைப்பில் இருந்த குறைபாடுகள்.  
• செயல்பாட்டுக் கட்டுப்பாட்டில் ஏற்பட்ட குளறுபடிகள்.  
• டிசம்பர் மாதத்தில் நிலவிய மோசமான வானிலை.  
கடுமையான நடவடிக்கை எடுத்த DGCA
டிசம்பர் 3 முதல் 5-ஆம் தேதி வரை ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளைத் தொடர்ந்து, விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இண்டிகோ நிறுவனம் மீது அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது:
1. மெகா அபராதம்: விதிமுறைகளை மீறியதற்காக இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ. 22.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  
2. வங்கி உத்தரவாதம்: எதிர்கால விதிமுறை இணக்கத்தை உறுதி செய்ய ரூ. 50 கோடி வங்கி உத்தரவாதத்தை (Bank Guarantee) சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  
3. அதிகாரிகள் மீது நடவடிக்கை: போதிய திட்டமிடல் இல்லாத காரணத்திற்காக நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரை (SVP) பொறுப்பிலிருந்து நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  
எதிர்காலத் திட்டம்: இந்தச் சிக்கல்களைத் தீர்க்க பிப்ரவரி 10, 2026-க்குப் பிறகு தங்களுக்குத் தேவையான போதுமான விமானிகள் மற்றும் பணியாளர்கள் இருப்பார்கள் என்று இண்டிகோ நிறுவனம் அரசுக்கு உறுதி அளித்துள்ளது. இதன் மூலம் விமான ரத்துக்கள் தவிர்க்கப்பட்டு, செயல்பாடுகள் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.