india

img

எஃப்.சி.ஆர்.ஏ சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்யாமல் தற்காலிகமாக நிறுத்திவைப்பு - சு.வெங்கடேசன் எம்.பி

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதனை ஒன்றிய அரசு தாக்கல் செய்யாமல் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாகவும், இந்த மசோதாவுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் எனவும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026, மார்ச் 25-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிநாட்டுப் பங்களிப்புகளை ஏற்றுக்கொள்வதையும் பயன்படுத்துவதையும் ஒழுங்குபடுத்துதல் என்ற பேரில் முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் முழுக்க முழுக்க கிறித்தவத் தொண்டு நிறுவனங்களையும், தேவாலயங்களையும், பிற மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களையும், குறிவைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் என எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்யாமல் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாகவும், இந்த மசோதாவுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"FCRA உரிமம் சார்ந்த புதிய சட்ட மசோதா நிர்வாகக் குறைபாடுகளுக்காக சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் மிக மோசமான விதிகளைக் கொண்டது. இது காலனிய காலத்து சட்டத்தைவிடக் கொடியது.
கல்வி மற்றும் மருத்தவம் சார்ந்த கிருஸ்துவ அமைப்புகளின் சேவை நிறுவனங்களை குறுகிய அரசியல் கண்ணோட்டத்தோடு சீர்குலைக்கும் பாஜகவின்  அப்பட்டமான முயற்சி.
எங்களின் கடும் எதிர்ப்பினால் மசோதாவை தாக்கல் செய்யாமல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். தொடரும் ஆபத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.