சென்னை, அக். 7 - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. துணை முதலமைச்ச ராக உதயநிதி நியமனத்தை தொடர்ந்து அமைச்சரவையில் அவருக்கு 3-வது இடம் அளிக்கப்பட்டது.
இந்த மாற்றத்தின் போது அமைச்சரவை யில் இருந்து செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், கா. ராமச்சந்திரன் ஆகிய 3 பேர் நீக்கப்பட்டனர். வி. செந்தில் பாலாஜி, ஆவடி சா.மு. நாசர், கோவி. செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப் பட்டனர். மூத்த அமைச்சர்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், இளம் அமைச்ச ர்கள் மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டன.
இந்நிலையில், மாற்றம் செய்யப்பட்ட தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை அக்டோபர் 8 காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தொழில் முதலீடு களுக்கு வழங்கப்படும் அனுமதிகள், சலுகைகள் குறித்து விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், மதுக்கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் தமிழ்நாட்டில் தற்போதுள்ள 4829 மதுக்கடைகளில் 500 கடைகளைக் குறைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மூதாட்டி கொலை: உறவினர்கள் சாலை மறியல்
மண்டபம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் பால் வியாபாரம் செய்த மூதாட்டி சின்னப்பொன்னு கொலை செய்யப்பட்டு நகை பறிக்கப்பட்டது. கொலையாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 2 நாட்களுக்குள் கைது செய்யப்படுவர் என காவல்துறை உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டுமிரட்டல்
கோவை: அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காவல்துறை மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். சோதனையில் மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது.
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்
சென்னை, அக். 7 - சென்னையில் இருந்து பெங்களூரு, மைசூரு, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில் இடையேயும், அதேபோல கோவை - பெங்களூரு, மதுரை - பெங்களூரு இடையேயும் இருக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு அடுத்ததாக, படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி, முற்றிலும் படுக்கை வசதியுடன் கூடிய ரயில் பெட்டிகளை சென்னை ஐசிஎப் தயாரித்து பெங்களூருவில் உள்ள நிறுவனத்திடம் கொடுத்தது. இதில், ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகளுக்கு தூங்கும் வசதி கொண்ட படுக்கைகள் நவீன தொழில் நுட்பத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 160 கி.மீ. வேகத்தில் சென்றாலும் பெட்டிகள் குலுங்காமல் இருக்கவும் விரைவாக கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்கள் விரைவில் பரிசோதனைக்கு விடப்பட உள்ளன. சென்னையில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“வந்தே பாரத் முதல் படுக்கை வசதி ரயில் தயாரிப்பு பணிகள் முடிந்து ஐசிஎப் தொழிற்சாலைக்குள் பல்வேறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஏதாவது ஒரு நகருக்கு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. டிசம்பர் அல்லது ஜன வரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குவிடப்படும்.
படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் முதல் முதலாக எந்த நகருக்கு விடப்படும் என்பதை ரயில்வே வாரியம் முடிவு செய்யும். சென்னையில் இயக்கப்படுமா? அல்லது வேறு நக ரங்களுக்கு ஒதுக்கப்படுமா? என்பது ஓரிரு மாதங்களில் தெரிய வரும்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 17,000 கனஅடியாக உயர்ந்துள்ளதால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து, சனிக்கிழமை காலை விநாடிக்கு 12,713 கனஅடியாக உயர்ந்தது.
தேனியில் பேருந்து - இருசக்கர வாகனம் மோதல்: ஒருவர் பலி
தேனி: கம்பம் பைபாஸ் ரோட்டில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் வாகனத்தில் சென்ற டி.வி. மெக்கானிக் அரசாங்கம் உயிரிழந்தார். விபத்தில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கில் தீப்பற்றி, பேருந்திற்கும் பரவியது. பயணிகள் தப்பியோடினர். பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.