india

img

வக்பு திருத்தச் சட்டம்: வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!

புதிய வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடரும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 20ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்ற இரு அவைகளிலும் முஸ்லிம் மக்களை ஒடுக்கும் நோக்கத்தில் வக்பு வாரிய திருத்த மசோதாவை மோடி அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில், மசோதா சட்டமாக மாறியது. இந்நிலையில், வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த வழக்குகள் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் மற்றும் நீதிபதி கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி நடந்த விசாரணையில், வக்பு திருத்தச் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வக்பு திருத்தச் சட்டத்தின் கீழ், வக்பு வாரியத்தில் புதிய நியமனங்களை மேற்கொள்ளவும், ஆவணங்கள் இல்லாத வக்பு சொத்துகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஒரு வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இதனை தொடர்ந்து இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிரான வழக்குகளின் விசாரணை மே 15-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. மேலும், புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வுக்கு இவ்வழக்கை மாற்றம் செய்து முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா உத்தரவிட்டார். 
இந்த நிலையில், வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடரும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 20ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.