india

img

என்.சி.இ.ஆர்.டி 8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நீதித்துறை குறித்து சர்ச்சை பாடம் - உச்சநீதிமன்றம் கண்டனம்

என்.சி.இ.ஆர்.டி 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற புதிய பாடம் சேர்க்கப்பட்டதை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) திங்கள் கிழமை வெளியிட்டுள்ள புதிய 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் “நீதித்துறையில் நிலவும் ஊழல்” மற்றும் வழக்கு களின் பெரும் தேக்கம் உள்ளிட்டவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” (The role of the judiciary in our society) என்ற தலைப்பிலான அத்தியாயத்தில், நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் நிலவும் ஊழல்; போதிய எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லாமை; சிக்கலான சட்ட நடைமுறைகள்; போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை; தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்டவைகளின் தொகுப்புகள் பாடமாக கொடுக்கப் பட்டுள்ளன. வழக்குகள் தேக்கம் குறிப்பாக, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் தோராயமான எண்ணிக்கையை இந்தப் பாடப்புத்தகம் வழங்கியுள்ளது. அதில், உச்சநீதிமன்றம் சுமார் 81,000 வழக்குகள் ; உயர்நீதி மன்றங்கள் 62,40,000 வழக்குகள்; மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்கள் 4,70,00,000 வழக்குகளை நிலுவையில் வைத்துள்ளன என நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மந்தமாக உள்ளன என்பது போன்ற கருத்துகளுடன் பாடப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,”ஊழல் மற்றும் தவறான நடத்தை தொடர்பான நிகழ்வுகள் பொதுமக்களின் நம்பிக்கையை எதிர்மறையாகப் பாதிக்கின்றன. மக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வெளிப்படைத் தன்மையும் பொறுப்புக்கூறலும் இன்றியமையாதவை” என 2025 ஜூலை மாதம் அவர் தெரிவித்த கருத்தை இந்தப் புத்தகம் மேற்கோள் காட்டியுள்ளது. அதே போல, நீதிபதிகள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நடத்தை விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பது புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. நீதிபதியை எப்படி நீக்குவது? முக்கியமாக, நீதிபதியை எப்படி நீக்குவது என்பது தொடர்பாகவும் பாடப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. , தேர்தல் பத்திரங்கள் (அநாமதேய அரசியல் நிதி) தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் ஆன்லைன் பேச்சுரிமை மீதான கட்டுப்பாடுகள் அரசியலமைப்புக்கு விரோதமானது என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவை பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற புதிய பாடம் சேர்க்கப்பட்டதை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்க நினைப்பவர்களை எப்படி கையாள வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றும், இதில் தவறு செய்தவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.