headlines

img

ஏகாதிபத்தியத்தின் இருளும் ரஷ்யாவின் ஒளியும்

ஏகாதிபத்தியத்தின் இருளும் ரஷ்யாவின் ஒளியும்

சர்வதேச அரசியலில் கியூபா என்பது ஒரு நாடு மட்டுமல்ல, அது அடக்குமுறைகளுக்கு அஞ்சாத ஒரு போராட்டத்தின் அடையாளம். இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபா மீது ஏவிவிட்டுள்ள “எரிசக்திப் போர்” அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மிக மோசமாகச் சிதைத்து வருகிறது. கியூபாவின் தினசரி எரி பொருள் தேவையில் 40 சதவீதத்தை மட்டுமே அந்த நாட்டினால் உற்பத்தி செய்ய முடிகிறது. மீத முள்ள தேவையைப் பூர்த்தி செய்ய அண்டை நாடுகளை நம்பியிருந்த சூழலில், வெனிசுலா மீது தாக்குதல் நடத்தியும், மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு வரி விதிப்பு மிரட்டல்களை விடுத்தும் கியூபாவுக்குச் செல்லும் எரிபொருள் விநியோகச் சங்கிலியை அமெரிக்கா திட்ட மிட்டுத் துண்டித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், கியூபாவைத் துயரத்தில் தனித்து விடமாட்டோம், தவிக்கவிட மாட்டோம் என்று முழங்கியபடி ரஷ்யா நீட்டியி ருக்கும் உதவிக்கரம் உலக அரங்கில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த மூன்று மாதங்களாக ஒரு சொட்டு எண்ணெய் வரத்து கூட இன்றித் தவித்த கியூபாவின் மாடன்சாஸ் துறைமுகத்திற்கு, அமெரிக்காவின் தடைக ளைத் தகர்த்தெறிந்து ரஷ்யாவின் ‘அனடோலி கொலோட்கின்’ கப்பல் 7,30,000 பேரல் எண்ணெய் யைச் சுமந்து வந்திருப்பது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை. இது சுமார் 1,80,000 பேரல் டீசலை உற்பத்தி செய்யப் போதுமானது. “கியூபா ஒரு முழு மையான முற்றுகைக்குள் தள்ளப்பட்டிருக்கி றது; ஒரு ரஷ்யக் கப்பல் அந்த முற்றுகையை உடைத்துள்ளது. இரண்டாவது கப்பலும் தற் போது தயாராகிறது” என்று ரஷ்ய எரிசக்தி அமைச்சர் செர்ஜி சிவிலியோவ் கசான் நகரில் கூறியுள்ள வார்த்தைகள், ஓர் உண்மையான தோழமையின் வெளிப்பாடே!

அமெரிக்காவின் இரக்கமற்ற பொருளாதா ரத் தடைகளால் மின்சாரம் இன்றி, உணவு மற்றும் மருந்துகள் இன்றி கியூப மக்கள் தவித்தா லும், அவர்களின் போராட்ட வீரியம் குறைய வில்லை. தலைநகர் ஹவானாவின் வீதிகளில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் சைக்கிள்க ளிலும், மின்சார ஸ்கூட்டர்களிலும் அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் அணிவகுத்து நின்று, “கியூபா வாழ்க! முற்றுகை ஒழிக!” என்று கர்ஜிப் பது அசாத்தியமானது. “இங்கே யார் பயப்படுகி றார்கள்? இங்கே யார் சரணடையப் போகிறார் கள்?” என்ற அந்த மக்களின் முழக்கம், பசியைக் காட்டி ஒரு தேசத்தை அடிபணிய வைக்க முடி யாது என்பதை உலகுக்கு உரக்கச் சொல்கிறது.

சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கியூபாவின் இருளைப் போக்க முன்வந்துள்ள ரஷ்யாவின் செயல் பாராட்டுக்குரியது. உலக வர லாற்றில், அடக்குமுறைகளை விட அறமும் தோழமையுமே இறுதியாக வெல்லும் என்ப தற்கு கியூபாவின் இந்தத் தற்போதைய நிலை ஒரு சிறந்த சான்று. மக்களின் அடிப்படைத் தேவை களான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவத்தை முடக்குவது மனிதத்தன்மையல்ல, அது மனிதா பிமானத்திற்கு எதிரான கொடும் குற்றம்.