அரசுப் பள்ளிகள் சுருங்கி வருகிறது என்பதை ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிஎம் எம்.பி ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில், சிபிஎம் எம்.பி ஜான் பிரிட்டாஸ், அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் எண்ணிக்கை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய இணையமைச்சர் ஜெயந்த் சவுதிரி எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், இந்தியாவில் 2024-25 கல்வி ஆண்டில் 10,13,322 அரசு பள்ளிகள் மற்றும் 3,39,583 தனியார் பள்ளிகள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2020-21 கல்வி ஆண்டில் இருந்து கணக்கிடும்போது கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதே சமயம், 2024-25 கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 3,39,583 என அதிகரித்துள்ளது. இதில் 1,04,508 பள்ளிகள் உத்தர பிரதேசத்தில் மட்டுமே உள்ளன. அதனைத்தொடர்ந்து, ராஜஸ்தானில் 33,548 பள்ளிகளும், மத்திய பிரதேசத்தில் 28,212 பள்ளிகளும் உள்ளன. இந்த நிலையில், அரசுப் பள்ளிகள் சுருங்கி வருகிறது என்பதை ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக சிபிஎம் எம்.பி ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் தனியார் சுயநிதிப் பள்ளிகளின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 8,475 ஆக அதிகரித்துள்ளது என்பதை மாநிலங்களவையில் ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டது.
அரசுப் பள்ளிகள் சுருங்கி வருகிறது. தனியார் பள்ளிகள் விரிவடைந்து வருகிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
