india

img

இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பா.ஜ.க.? - சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பா.ஜ.க என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாகவும், இதன் காரணமாக, பரஸ்பர வரி விதிப்பை 25 சதவிகி தத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைப்பதாகவும், பதிலுக்கு  அமெரிக்க பொருட்களுக்கான தனது வரி மற்றும் வரி அல்லாத தடைகளை இந்தியா பூஜ்ஜியமாகக் குறைக்கும் என்றும், 500 பில்லியன் டாலர் மதிப்பிலான தொழில்நுட்பம், வேளாண், நிலக்கரி மற்றும் பல பொருட்களை அமெரிக்காவில் இருந்து பெறுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க நேரப்படி பிப்ரவரி 2 (திங்களன்று), டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ எனும் சமூகவலைதளப் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். 
இந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்தார் என்பதை உறுதி செய்கிறார் அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்.
இந்திய - அமெரிக்க ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாகவே நேற்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ஆனால், அதற்கு மாறாக இந்தியா ஒப்புக்கொண்ட முடிவுகளைப் பட்டியலிடுகிறார் அமெரிக்க அதிகாரி.
இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பா.ஜ.க.?" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.