politics

img

எங்கள் குரல் பாஜகவின் அதிகாரத்திற்கு அடிபணியாது! - சு.வெங்கடேசன் எம்.பி

தேச பாதுகாப்பிற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குமான எங்களின் குரல் பாஜகவின் அதிகாரத்திற்கு அடிபணியாது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.
ராகுல் காந்தியை பேசவிடாமல் பாஜகவினர் தடுத்ததற்காக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், காங்கிரஸ் எம்.பிக்கள் அமரீந்தர் சிங், மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங், ஹிபி ஈடன், பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ், கிரண்குமார் ரெட்டி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோர் தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், தேச பாதுகாப்பிற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குமான எங்களின் குரல் பாஜகவின் அதிகாரத்திற்கு அடிபணியாது என்று சு.வெங்கடேசன் எம்.பி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை.
ஜனநாயகத்தின் உயிர்நாடியான விவாதமரபை முற்றிலும் சீர்குலைத்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் பாஜக அரசை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக நான் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளோம்.
தேசபாதுகாப்பிற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குமான எங்களின் குரல் பாஜகவின் அதிகாரத்திற்கு அடிபணியாது.
பள்ளிக்கூடத்தை நடத்துவதைப் போல நாடாளுமன்றத்தை நடத்த நினைக்கிறது பாஜக.
நாட்டின் பாதுகாப்பு விசயத்தில் ஆளுங்கட்சியின் அலட்சியத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.
அனைத்தையும் விட மேலானது நாடாளுமன்ற ஜனநாயகம்.
அதனை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவின் அரசியலை முறியடிப்போம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.