தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற 6 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகிற 4 ஆம் தேதி ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகும். இந்த மேலடுக்கு சுழற்சி 6 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் தீவிரம் அடையும். அந்த காற்றழுத்த தாழ்பு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ அல்லது அதைவிட தீவிரமாகவோ மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை புயல் எச்சரிக்கையாக மாறுமா? என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது.
முன்னதாக மத்தியப்பிரதேசம், அரியானா, கிழக்கு ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி, மேற்கு உத்தரப்பிரதேசம், வட தெலுங்கானாவில் 3 நாளுக்கு வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே தீவிர வெப்பமானது வடமேற்கு, வடகிழக்கு, வடக்கு இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 3 நாட்களுக்கு வெப்ப அலையாகவோ, தீவிர வெப்ப அலையாகவோ தொடரும் என்றும், அதன்பிறகு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.