தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் மாதம் முதல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என மக்களவையில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
மக்களவையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் மாதம் முதல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என தெரிவித்தார்.
முதல் கட்டமான வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என்றும், இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மார்ச் 1, 2027-ம் தேதி குறிப்புத் தேதியாக (Reference Date) இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் லடாக் ஆகிய பனிப்பொழிவு உள்ள பகுதிகளில் 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
2027-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான கேள்விகள் தொகுப்பை இறுதி செய்யும் பணியில் இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
