மத்திய கிழக்குப் போர் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உட்பட பலர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் கூறிவைத்து தாக்கியது; இந்த போர் காரணமாக சரக்கு கப்பல் போக்குவரத்து மேலும் சீர்குலைத்ததுடன், உலகளாவிய எரிசக்திச் சந்தைகள் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையையும் பாதித்து வருகின்றது.
இதனால் இந்தியாவில் எல்.பி.ஜி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக ஹோட்டல்கள், தொழில்துறைகள் உள்ளிட்டவை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் வேலை இழக்கும் அபாயம் காணப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி-க்கள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கிடையில் நேற்று மக்களவியிலும், இன்று மாநிலங்களவையிலும் மத்திய கிழக்கு போரால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
எனினும், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலைப் பிரதமர் வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர்கள், அவரது உரையை விமர்சித்தனர்.
இந்த நிலையில், மத்திய கிழக்கு போர் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாளை மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
