india

img

10 வயதிற்குள்ளாகவே புகைப் பழக்கத்திற்கு அடிமையாகும் சிறுவர்கள் : ஆய்வில் தகவல்

இந்தியாவில் பத்து வயதிற்குள்ளாகவே சிறுவர்கள் புகைப் பழக்கத்திற்கு அடிமையாவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 987 பள்ளிகளிலிருந்து 97 ஆயிரத்து 302 மாணவர்களிடம் ஐ.ஐ.பி.எஸ் மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.  13 முதல் 15 வயதுள்ள பள்ளி செல்லும் சிறுவர்களிடையே புகையிலைப் பயன்பாடு குறித்து இந்த ஆய்வில், பத்து வயதிற்குள்ளாகவே 38% சிறுவர்கள் சிகரெட் புகைப்பதைத் தொடங்கிவிடுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  

இதில் அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் அதிகமாகப் பள்ளி செல்லும் மாணவர்கள் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இமாச்சல் பிரதேசம், கர்நாடகாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவாகவே மாணவர்களிடம் புகையிலை பழக்கம் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சிகரெட் புகைக்கும் சிறுவர்களின் சராசரி வயது 11.5 ஆகவும், பீடி புகைப்பவர்களின் சராசரி 10.5 வயதாகவும் உள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.  

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில்,  குழந்தைகளிடையே புகையிலை குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்களும், பெற்றோர்களும்தான் ஏற்படுத்த வேண்டும். பெரியவர்களிடையே புகைப் பழக்கம் குறைந்தால் அது சிறுவர்கள் புகைப்பதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.