புதுதில்லி, டிச. 11 - அதானி குழுமம் தொடர்பான சில விவகாரங்களைக் கையாண்டு வந்த ‘செபி’ (SEBI)-யின் தலைமை பொது மேலாளர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ‘பிசினஸ் வேல்டு’ செய்தி வெளியிட்டுள்ளது.
பங்குச் சந்தை விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு, ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்களை (SCN) அனுப்புவது தொடர்பான பிரிவில் (Quasi Judicial Cell) திறமையான அதிகாரிகளில் ஒருவராக- அதன் தலைமைப் பொதுமேலாளராக (CGM) இருந்தவர் அனிதா அனூப். அதானி குழுமம் தொடர்பான சில விஷயங்களையும் கையாண்டு வந்தார். இந்நிலையில் தான், கடந்த வாரம் அனூப் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதாக ‘பிசினஸ்வேல்டு’ கூறுகிறது.
அபராதம் விதிக்கும் அதிகாரம் பெற்றவர்
தகுதிவாய்ந்தவர்களே பெரும் பாலும் செபி அதிகாரிகளாக நியமிக்கப் படும் நிலையில், இவர்களுக்கு, பிரிவு 11 மற்றும் 11B இன் கீழ் விதிமீறும் நிறு வனங்களிடம் விளக்கம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தையின் நலன்களுக்காக வழி காட்டுதல்களை வழங்கவும், விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு அப ராதம் விதிக்கும் அதிகாரமும் இவர் களுக்கு உள்ளது.
இந்நிலையில் தான், அனிதா அனூப் திடீரென மாற்றப்பட்டு, மாற்றுப்பணியில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு செபிக்குத் திரும்பிய மற்றொருசிஜிஎம் சந்தோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். அனிதா அனூப் தற்போது சட்டப் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனிதா அனூப்பிற்கு மட்டும் இடமாற்றம்
அனூப்பின் இடமாற்றம் செபியின் வழக்கமான இடமாற்றலைப் போல அல்லாமல், அவர் மட்டுமே இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வழக்க மாக, செபியின் காலமுறை இடமாற்றங்களில் இடம்பெறும் அதிகாரிகளின் பட்டியல் நீண்டதாக இருக்கும். ஆனால், அனூப் விவகாரத்தில், அவர் மட்டுமே தனியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
2022-ஆம் ஆண்டு ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் அதானி குழும மோசடிகளை அம்பலப்படுத்திய நிலையில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழுமத்தின் நான்கு நிறுவனங்களுக்கு ‘செபி’ விளக்கம் கேட்டு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. அதானி குழுமம் வெளிநாட்டு நிறுவனங்களை முன்னோடியாகப் பயன்படுத்தி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் விளம்பரதாரர்களின் பங்குகளை மறைப்பதாக செபி குற்றம் சாட்டி யுள்ளது.
அதானியின் 4 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
குறிப்பாக, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி பவர், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொரு ளாதார மண்டலம் ஆகிய நிறு வனங்கள், பொது பங்குதாரர் விதி முறைகளை மீறியதற்காக ஷோ காஸ் நோட்டீஸ்களைப் பெற்றுள்ளது.
அதானி குழுமத்திற்கு வழங்கப் பட்ட ஷோ காஸ் நோட்டீஸின் பின்னணி யில் அனிதா அனூப் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதுவே அனிதா அனூப் பணியிடமாற்றம் செய்யப்பட்ட தற்கான முக்கியக் காரணமாக இருக்க லாம் என்று ‘பிசினஸ்வேல்டு’ செய்தி வெளியிட்டுள்ளது.
‘கூடா நட்பு தேசத்திற்கு கேடில் முடியும்’
பிசினஸ்வேல்டு வெளியிட்ட செய்தியை முன் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் விமர்சனம் ஒன்றை பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதானி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய ‘செபி’ தலைமை பொது மேலாளர் அனிதா அனூப் டிசம்பர் 4 அன்று வழக்கத்திற்கு மாறாக இடமாற்றல் செய்யப்பட்டது தொடர்பாக ‘பிசினஸ்வேல்டு’ வெளியிட்டுள்ள செய்தி - படமும், அதானி மீது விசாரணை கோரி, நாடாளுமன்றமே அல்லோலகலப்படும் போதும் டிசம்பர் 9 அன்று ஜெய்ப்பூரில் ஒரே மேடையில் காட்சி அளித்த மோடி - அதானி படமும்- இரண்டும் வேறு வேறு படங்கள் அல்ல! ஒரே படத்தின் இரண்டு காட்சிகள் என்று சு. வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘கூடா நட்பு தேசத்திற்கு கேடில் முடியும்’ என்றும் சாடியுள்ளார்.