போபால்:
மத்திய பிரதேசத்தில் மூடப்பட்ட தொழிற்சாலை யில் இருந்து அம்மோனியா வாயு கசிந்ததால் நள்ளிரவில்மக்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகிஅவதிப்பட்டனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அடுத்த ஆச்சரபுராவில் கடந்த ஓராண்டாக தொழிற்சாலை ஒன்று மூடியேக் கிடக்கிறது. இந்நிலையில் புதன்கிழமை யன்று இரவு அந்த தொழிற்சாலையில் இருந்து திடீரென்று அம்மோனியா வாயு கசிந்து வெளியேறியது. இதனால் தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் பரேவகேடா கிராம மக்களுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.தகவலறிந்து வந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கிராம மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றினர்.
தீயணைப்பு படையினர், மூடியிருந்த தொழிற்சாலைக்குள் புகுந்து அம்மோனியா வாயு கசிந்து கொண்டிருந்த தொட்டியில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதன் பின்னர் வாயு கசிவது நின்றது. இதுகுறித்து போபால் ஆட்சியர் அவினாஷ் லவானியா கூறுகையில், ‘எரிவாயு கசிவால் பரேவகேடா கிராமத்தைச் சேர்ந்த 20 பேருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையானமருத்துவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சாலை யைச் சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
விசாரணையில் மூடப்பட்டிருந்த தொழிற்சாலையில் இருந்த தொட்டியில் இருந்து அம்மோனியா வாயு வெப்பத்தின் காரணமாக வெளியேறி உள்ளது. தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருந்தால், அம்மோனியா வாயு அவ்வப்போது வெளியேற்றப்படும். தற்போது ஒரு வருடமாக மூடப்பட்டதால், குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வால்வு வெடித்து அம்மோனியா வாயு கசிந்தது. தொழிற்சாலையின் உரிமையாளர் ஜாவேத் கானுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.