india

img

பாஜக அரசு நாட்டில் அபத்தங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.... நிர்மலா சீதாராமன் கணவர் பரக்கலா பிரபாகர் சாடல்...

புதுதில்லி:
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பரக்கலா பிரபாகர், தனியாக யூ-டியூப்சேனல் நடத்தி வருகிறார். அதில், அரசியல், பொருளாதாரம் தொடர்பாக வாரந்தோறும் கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், கடந்த வாரம் பதிவேற்றியுள்ள வீடியோவில், மோடி அரசின் செயல் பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

புதிய இந்தியாவை உருவாக்குவதாகக் கூறிக்கொண்டு ஒன்றிய அரசு அபத்தங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. ஜாலியன்வாலாபாக் நினைவிடத்தை பொழுது போக்கு பூங்காவாக மாற்றிவிட்டது.மதத்தின் பெயரால் மக்களை பிரித்தாள்கிறது. சிறுபான்மை சமூகத்தினர் தாக்கப்படுவதற்கு பாஜக-வினரின் தூண்டுதல்களே காரணம். நாட்டின் தலைநகரில் ஊர்வலமாகச்செல்லும் வன்முறை கும்பல், சிறுபான்மையினருக்கு எதிராக பகிரங்கமாக கோஷமிடுகிறது. ‘அரசியலில் ஈடுபடும் பெண்கள்- ஆளும்பாஜகவைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைவரும், ஆண் தலைவர்களின் கைப்பாவைகளாகவும் அவர்களின் தேவைகளுக்காகவும் மட்டுமே உள்ளனர்’ என்று ஒரு சாமியார்கூறுகிறார்.

போராடும் விவசாயிகளின் மண்டையை அடித்து உடையுங்கள் என்று ஒரு ஐஏஎஸ் அதிகாரி கூறுகிறார். அதற்கு அந்த மாநிலத்தின் பாஜக முதல்வராக இருப்பவர் வக்காலத்துவாங்குகிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தில்,பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் லாரியில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்படுகிறார். ‘நாடு வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதால்’ இந்த சம்பவங்கள் அனைத்தும் ஆட்சியாளர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட டிஜிட்டல் போஸ்டரில் ஜவஹர்லால் நேருவின் படம் இடம்பெறாதது கூட அவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டது.இவ்வாறு பரக்கலா பிரபாகர் விமர்சித் துள்ளார்.