புதுதில்லி:
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி சனியன்று (ஜூன் 26)தில்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துகின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும் விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை அழிக்கும் வகையிலும் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கியவிவசாயிகள் போராட்டம் 6 மாதங்களை நிறைவு செய்தது. இன்று 7-வது மாதத்தில் அடியெடுத்துவைக்கிறது.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் மோடி அரசு பிடிவாதத்துடன் செயல்படுகிறது என்று அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் ‘விவசாயத்தை காப்போம், ஜனநாயக நாளை காப்போம்’ என்ற முழக்கத்துடன் தில்லி எல்லையில் ஜூன் 26 ஆம் தேதி விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறுகிறது. பேரணிக்கான ஏற்பாடுகள் தில்லி எல்லைகளான சிங்கு, திக்ரி, காசியாபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.