கவனம் செலுத்தப்பட வேண்டிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் - பேரா.சோ.சுரேஷ்
தமிழகத்தில், உயர்கல்வியில் சேரும் மாணவர்க ளின் சதவீதம் 51.3 ஆகும். இது தேசிய சராசரி யைக் காட்டிலும், இரண்டு மடங்குக்கும்அதிகம் என நாம் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். இந்த இலக்கினை அடைய, ஏழை, எளிய மாண வர்கள் உயர்கல்வி பயில்வதற்கு நம்பிக்கை நட்சத்தி ரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் அரசு கலை அறி வியல் கல்லூரிகளை புதிதாக தொடங்குவதற்கும், அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை தொ டங்குவதற்கும் மேற்கொள்ளப்பட்ட, பாராட்டத்தக்க, திட்டமிட்ட முயற்சிகளும் முக்கிய காரணம் ஆகும். இன்று அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 3,50,000.
புதிய கல்லூரிகளும், புதிய பாடப்பிரிவுகளும்
2011 ஆம் ஆண்டு முதல் 2021 வரையிலான பத்து ஆண்டுகளில் புதிதாக 41 கலை அறிவியல் கல்லூ ரிகள் தொடங்கப்பட்டன. பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளாக தொடங்கப்பட்ட 41 கல்லூரிகள், அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டன. அதுமட்டு மில்லாமல் இந்த பத்தாண்டுகளில் 1666 புதிய பாடப் பிரிவுகள் அரசு கல்லூரிகளில் தொடங்கப்பட்டன. 2021-2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 20 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் 2025-26-ஆம் கல்வி ஆண்டில் புதிதாக 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர ஆசிரியர்கள் நியமனமின்மையும், கௌரவ விரிவுரையாளர்களும்
2011ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் இயங்கி வந்த அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 62. கடந்த 14 ஆண்டுகளில் 102 புதிய அரசு கல்லூரிகள் (அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்ட 41 பல்க லைக் கழக உறுப்பு கல்லூரிகள் உட்பட) உருவாக்கம் பெறவும், 1500க்கும் மேற்பட்ட புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கு கொடுக்கப்பட வில்லை. 2006 முதல் 2011 வரை, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4 முறை 3500 ஆசிரியர்கள் தெரிவு செய்யப் பட்டு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் 82 அரசுக் கல்லூரிகளும், 1661 வரை புதிய பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்ட 2011 முதல் 2021 வரையிலான பத்தாண்டுகளில் ஒரே ஒருமுறை 957 ஆசிரியர்கள் மட்டும் நிரந்தர அடிப்ப டையில் தெரிவு செய்யப்பட்டனர். விளைவு, இன்றைய நிலையில் அரசுக் கல்லூரி களில் 5000க்கும் குறைவாக நிரந்தர ஆசிரியர்கள் பணி யாற்றி வரும் சூழலில் 7360 கௌரவ விரிவுரையா ளர்கள், மாதம் வெறும் ரூ.25,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். புதிதாக தொடங்க உள்ள 11 கல்லூரிகள், பல கல்லூரிகளில் புதிதாக தொடங்க உள்ள 200க்கும் மேற்பட்ட புதிய பாடப்பிரிவுகள், பணி ஓய்வு காலிப்பணியிடங்கள் போன்றவற்றில் எதிர் வரும் கல்வி ஆண்டில் கூடுதலாக 2000 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளது.
ஆசிரியர் நியமன அறிவிப்பும், நீதிமன்ற வழக்கும்
2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயர் கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4000 உதவிப் பேராசிரியர்கள் தெரிவு செய் யப்பட்டு விரைவில் அரசுக் கல்லூரிகளில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என அறிவித்தார். ஆனால் ஆசி ரியர் தேர்வு வாரியம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் தான் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும் என குறிப்பிட்டிருந்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் 2021ஆம் ஆண்டு வெளி யிடப்பட்ட அரசாணை எண் 56ஐ சுட்டிக்காட்டி, 1146 கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப் பட்ட பின்பே, அரசுக் கல்லூரிகளில் நிரந்தர ஆசிரி யர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என கௌரவ விரிவுரையாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்ப தால், குறிப்பிட்ட மாதத்தில் தேர்வு நடைபெறவில்லை. நீதிமன்ற வழக்கினை விரைந்து முடிவுக்கு கொண்டு வந்து, நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் நடைபெற அரசின் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. அரசுக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் சூழலில், நிரந்தர ஆசிரியர் நியமனம் இல்லாமல், குறைந்த தொகுப்பூதியத்தில் கௌரவ விரிவுரையாளர்களை மட்டும் நியமித்தால் போதும் என்ற எண்ணம் உரு வாகுமானால்; உயர்கல்வியில் சேரும் மாணவர்க ளின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாமே தவிர, தரமான உயர்கல்வி என்பது கானல் நீராகத்தான் இருக்கும்.
எம்பிஏ, எம்சிஏ-வுக்கு ஆசிரியரே இல்லை
2023-24ஆம் கல்வி ஆண்டில் 5 அரசு கல்லூரி களில் எம்பிஏ பாடப்பிரிவும், 5 அரசுக் கல்லூரிகளில் எம்சிஏ பாடப்பிரிவும் தொடங்கப்பட்டது. இரண்டா ண்டுகள் நிறைவு பெறும் சூழலில் இதுவரை கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் கூட மேற்கண்ட பாடப் பிரிவுகளுக்கு செய்யப்படவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
கல்லூரி நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் காலியிடம்
மாணவர்கள், தங்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துதல் உட்பட பல்துறை சார்ந்த அறி வாற்றலை பெறுவதற்கு கல்லூரி நூலகங்கள் ஒரு சிறப்பான பங்களிப்பை செய்ய முடியும். உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்கும், கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுப்பதிலும் உடற்கல்வித் துறை யின் பங்கு அளப்பரியது. ஆனால் தமிழகத்தில் இயங்கி வரும் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 110 நூலகர் பணியிடங்களும், 80 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
விளையாட்டு போட்டிகளுக்கு நிதியின்மை
அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், சுயநிதிக் கல்லூரிகளிலும், மாணவர்கள் பிற கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கும், பயிற்சி பெறுவ தற்கும் நிதிகள் தாரளமாக செலவிடப்படுகின்றன. ஆனால், அரசுக் கல்லூரிகளில் மாணவர்களிட மிருந்து பெறப்படும் குறைந்தபட்ச நிதியிலிருந்தே, விளையாட்டு சாதனங்களை வாங்குவது, விளை யாட்டு விழா நடத்துவது, விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க செலவுகள் மேற்கொள்வது என அனைத்து செலவுகளையும் செய்வதால், பயிற்சி யாளர்களை நியமனம் செய்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கும், பயிற்சிக் காலத்தில் மாண வர்களுக்கு சிற்றுண்டி வழங்குவது உள்ளிட்ட செலவு களை மேற்கொள்வதும் சிரமமானதாக உள்ளது. எனவே, தமிழக அரசு அனைத்து அரசு கல்லூரிக ளுக்கும், ஒரு குறைந்தபட்ச தொகையினை விளை யாட்டு தொடர்பான செலவுகளுக்கு வழங்கும் பட்சத்தில், அரசுக் கல்லூரி மாணவர்கள் தங்களது விளையாட்டு தொடர்பான திறமைகளில் கூடுதல் முன்னேற்றத்தை அடைய முடியும்.
கல்வி சாரா பணிகளில் அழுத்தம்
ஆசிரியர் பற்றாக்குறையுடன் கற்பித்தல் பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களை கூடுதல் சிரமத்திற்கு உள்ளாக்கும் வகையில், யுஎம்ஐஎஸ் தொ டர்பான பதிவுகளை மேற்கொள்ளல், மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக விவரங்களை சேகரித்தல், பதிவிடுதல், அவ்வப்போது புள்ளி விவ ரங்களை சேகரித்தல் போன்ற ஏராளமான கல்வி சாரா பணிகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்துவதால், ஆசி ரியர்கள் வழக்கமான கல்விப் பணிகளை மேற்கொள்வ தில் சிரமப்படுகின்றனர். எனவே ஆசிரியர்களை இது போன்ற கல்வி சாரா பணிகளிலிருந்து விடுவித்து, இப்பணிகளை மேற்கொள்ள தகுந்த மாற்று ஏற்பாடு களை செய்ய வேண்டும்.
நீண்டகால கோரிக்கைகள்
அரசாணை வெளியிடப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படாமல் இருக்கும் பேராசிரியர் பணி மேம்பாடு, புத்தொளி- புத்தாக்க பயிற்சி களுக்கு டிசம்பர் 2023 வரை கால நீட்டிப்பு வழங்குதல், கல்லூரி முதல்வர், நூலகர் உடற்கல்வி இயக்குநர்க ளுக்கு மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்குதல், இணைப் பேராசிரியர் பதவிக்கு முனைவர் பட்டம் பெறு வதிலிருந்து விலக்கு, பணியில் மூத்தோரைக் காட்டி லும் இளையோர் கூடுதல் ஊதியம் பெறும் முரண் பாட்டை களைதல், முனைவர் பட்டப் படிப்புக்கு ஊக்க ஊதியம் வழங்குதல், பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைகளின்படி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வய தினை உயர்த்துதல் போன்ற நீண்ட காலமாக நிலு வையில் இருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்குதல், மே மாதம் ஊதியம் வழங்கு தல், மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு வழங்குதல் போன்ற கோரிக்கைகளிலும் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.
கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்