தண்டவாளத்தில் போல்ட், நட்டுகளை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி!
திருவள்ளூர், ஏப்.25- சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் நோக்கி செல்லும் ரயில்கள் திருவாலங்காடு ரயில் நிலை யம் வழியாக கடந்து செல்லும். மின்சார ரயில்கள், சரக்கு ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் போக்குவரத்திற்கு இந்த ரயில்பாதை முக்கியமானதாக உள்ளது. இதில் திருவாலங்காடு- அரிச்சந்திராபுரம் இடையே பிரதான தண்டவாளத்தில் இருந்து பிரியும் “லூப் லைன்” பாதை உள்ளது. இந்த நிலையில் வெள்ளியன்று அதிகாலை 1.15 மணியளவில் இந்த இணைப்பு தண்டவாளத்தில் இருந்த போல்ட்- நட் மற்றும் சிறிய இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி சென்று விட்டனர். இதனால் அங்கிருந்த சிக்னலில் கோளாறு ஏற்பட்டது. ரயில் பாதையில் சிக்னல் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த திருவாலங்காடு நிலைய அலுவலர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் உடனடியாக தண்டவாளத்தை ஆய்வு செய்தனர். அப்போது திருவாலங்காடு- அரிச்சந்திராபுரம் அருகே இணைப்பு தண்ட வாளத்தில் இருந்த போல்ட்-நட் மற்றும் இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி எடுத்துச் சென்றி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த னர். இதனால் பிரதான தண்ட வாளத்தில் இருந்து லூப்லைனுக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் அவ்வழியே மற்ற பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கும், போலீ சாருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. மேலும் இரவு நேரம் என்ப தால் லூப்லைனை உடனடியாக சரிசெய்வதில் சிரமம் ஏற்பட்டது. தண்டவாளத்தில் எந்த பிரச்சனையும் இல்லாததால் அவ்வழியே மற்ற ரயில்கள் பாதிப்பு இல்லாமல் இயக்கப்பட்டன. இந்நிலையில் தெற்கு ரயில்வே பாதுகாப்புஅதிகாரிகள் மேற்பார்வையில் அதிகாலை முதல் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தண்டவாளத்தை சரி செய்தனர். திருவாலங்காட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் லூப்லைனில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்டதால் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியது. சரக்கு ரயில் மீது கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர். எனினும் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்தநிலையில் தற்போது மீண்டும் திருவாலங்காடு அருகே அதேபோல் தண்டவாள லூப்லைன் பகுதியில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்டு உள்ள சம்ப வம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.