சிஐடியு ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் மேயர், கவுன்சிலருக்கு நேரில் பாராட்டு
திருநெல்வேலி, ஏப்.25- நெல்லை மாநகராட்சியில் பணி செய்யும் தினக்கூலி தொழிலாளர்களின் பிராவிடண்ட் பண்ட் பணம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொகையை உடனடியாக செலுத்த ஏற்பாடுகளை செய்வதாக மேயர் உறுதி அளித்தார். அதனை செயல்படுத்திய மேயர் கோ. ராமகிருஷ்ணனுக்கும், இதுகுறித்து மாமன்றத்தில் கேள்வி எழுப்பிய மாமன்ற உறுப்பினர் முத்து சுப்ரமணியன் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சிபிஎம் 55ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்து சுப்ரமணியன் கேள்வி எழுப்பினார். அதையொட்டி மாமன்ற கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் இபிஎப் அலுவலகத்தில் செலுத்துவதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. அதன் காரணமாக 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவர். இந்நிலையில், நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் வெள்ளியன்று நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன் மற்றும் சி.பி.எம் 55 ஆவது வார்டு உறுப்பினர் முத்து சுப்பிரமணியம் ஆகியோருக்கு கைத்தறி ஆடை அணிவித்து நன்றி தெரிவித்தனர். சி.ஐ.டி.யு நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க தலைவர் ஆர்.மோகன் தலைமையில் பொதுச்செயலாளர் மாரியப்பன், நிர்வாகிகள் இசக்கிமுத்து, சுரேஷ், செல்வி, வேல்வடிவு, அந்தோணி, தமிழ்ச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.