புதுதில்லி:
சிறுசேமிப்புகள் மீது மக்களுக்கு அளித்துவந்தவட்டிவிகிதங்களை மத்திய அரசு குறைத்திருப்பதற்கு சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சிஐடியு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு புதன் அன்று பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் முதலான பல சிறு சேமிப்புப் பத்திரங்கள் மீதான வட்டி விகிதங்களைக் குறைத்து அறிவித்தது. பின்னர் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத்தேர்தல்கள் நடைபெறுவது அரசின் நினைவுக்கு வந்து, விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக, தவறாக (‘due to oversight’) அவ்வாறு அறிவித்துவிட்டோம் என்று கூறி அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறது.
ஆனாலும் அரசின் உண்மையான நோக்கம் வெளிவந்துவிட்டது. தேர்தல்கள் முடிந்தபின் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நன்குதெரிகிறது.சரியாக ஓராண்டுக்கு முன்புதான் பாஜக அரசாங்கம் இதுபோன்று வட்டி விகிதங்களைக் குறைத்தது. அதனைத் தொடர்ந்து 2019 ஜூனிலும் கடுமையாகக் குறைத்தது. இப்போது ஓராண்டு காலத்திற்குள்ளேயே இதே போன்று சாமானிய மக்களின் பாதுகாப்பில் கை வைத்திருக்கிறது.அரசின் இந்நடவடிக்கை சாமானிய மக்களைக்கடுமையாகப் பாதிக்கும். அதிலும் குறிப்பாக தங்களுடைய சேமிப்புகளில் கிடைக்கும் வட்டியைக்கொண்டே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் ஊழியர்களையும், மூத்த குடிமக்களையும் கடுமையாகப் பாதிக்கும்.
பாஜக அரசு, தங்களுடைய எஜமானர்களான கார்ப்பரேட்டுகளுக்கும், பெரும் வர்த்தகப் புள்ளிகளுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக அவர்களின் கார்ப்பரேட் வரிகளில் வெட்டு, பல்வேறு நிதிச் சலுகைகள் அளித்திருக்கிறது. அவர்கள் அளிக்கவேண்டிய 6 லட்சம்கோடி ரூபாய் வரி நிலுவைத் தொகைகளைத் தள்ளுபடி செய்திருக்கிறது. அவர்கள் வங்கிகளில் வாங்கியகடன்களைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இதையெல்லாம் சரிக்கட்டுவதற்காக சாமானிய மக்கள் மீது கடும் சுமைகளை ஏற்றிக்கொண்டிருக்கிறது. இப்போது சிறுசேமிப்புகள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்திருப்பதும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஒன்றேயாகும்.மேலும் மக்கள் அரசாங்கத்தின் நிறுவனங்களில் சிறுசேமிப்புகள் மேற்கொள்வதிலிருந்து, அவர்களைத் திசைதிருப்பி, தனியார் கந்துவட்டிக் காரர்களிடம் தள்ளிவிட வேண்டுமென்ற நோக்கத்துடனும் அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.
இத்தகைய அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை சிஐடியு கண்டிக்கிறது. சாமானிய மக்களின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில்கை வைத்துள்ள அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குஎதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் சிஐடியுஉழைக்கும் மக்களைக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு சிஐடியு அறிக்கையில் கூறியுள்ளது.(ந.நி.)