புதுதில்லி:
மோடி அரசின் கொடிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) அழைப்பு விடுத்துள்ள செப்டம்பர் 25 பாரத் பந்த் போராட்டத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்வீர் என இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, சிபிஐ (எம்எல்) லிபரேசன் கட்சி பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வலியுறுத்தியும், வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் பேரெழுச்சி தொடர்ந்து பத்தாவது மாதமாக நடைபெற்று வருகிறது. ஆனால் மோடி அரசு தொடர்ந்து அராஜகமான முறையில் பிடிவாதத்துடன் செயல்பட்டு வருகிறது. போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்து வருகிறது. மோடி அரசாங்கத்தின் இந்தப் போக்கினை இடதுசாரிக் கட்சிகள் வன்மையாகக் கண்டிக்கின்றன. மேலும் வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; உத்தரவாதமான குறைந்தபட்ச ஆதார விலை அமலாக்கப்பட வேண்டும்; தேசிய பணமாக்கல் திட்டத்தை முற்றாக கைவிட வேண்டும்; மோசமான தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என மோடி அரசை வலியுறுத்துகின்றன.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் முன்னணி அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக ஆக்கிடும் வகையில் அனைத்துக் கிளைகளும் செயலூக்கத்துடன் பங்கேற்றிட வேண்டுமென இடதுசாரிக் கட்சிகள் அழைப்பு விடுக்கின்றன. பாரத் பந்த் போராட்டத்தை மாபெரும் வெற்றிச் பெற செய்யுமாறு நாட்டு மக்களுக்கு இடதுசாரிக் கட்சிகள் வேண்டுகோள் விடுக்கின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.