புதுதில்லி:
கொரோனா தொற்றுப் பரவலால், நாடு முழுவதும் பரவலாக அனைத்து மாநிலங்களிலுமே ஊரடங்கு பிறப்பிக் கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் தொழில் - வர்த்தகம் அனைத்தும் முடங்கியுள்ளன.
சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள், கனரக நிறுவனங்கள், போக்குவரத்து, கட்டுமானம், சாலையோர வியாபாரம்என அனைத்து துறையிலும் கோடிக்கணக்கானோர் வேலையிழப்பைச் சந் தித்துள்ளனர்.இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா ஊடரங்கு துவங்கிய 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரையிலான காலத்தில், தனியார் துறைகளில் மட்டுமல்லாமல் அரசுத் துறை வேலைவாய்ப்புகளும் கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.தேசிய ஓய்வூதிய அமைப்பிடமிருந்து கிடைத்த புள்ளி விவரங்களின்படி, 2020-21 நிதியாண்டில் அரசுத் துறைகளில் புதிய பணியமர்த்தல்கள் 27 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளன. குறிப் பாக, மாநில அரசுகளுக்கான வேலைவாய்ப்புகள் 20 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. 2019-20 நிதியாண்டில் அரசுத் தரப்பில் மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். இதுவே மிக மிகக் குறைவான எண்ணிக்கைதான். ஆனால், 2020-21 நிதியாண்டில் இதைக்காட்டிலும் குறைவாக வெறும் 87 ஆயிரத்து 423 பேர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. சுமார் 27 சதவிகித வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.
மாநில அரசு வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரையில், 2019-20 நிதியாண் டில் 3 லட்சத்து 89 ஆயிரமாக இருந்தது, 2020-21 நிதியாண்டில் 1 லட்சத்து 07 ஆயிரமாகக் குறைந்துள்ளது. இந்தக் காலத்தில், புதிய வேலைவாய்ப்புகளை மட்டுமல்லாமல், ஏற்கெனவே இருந்த வேலையையும் ஏராளமானோர் இழந் துள்ளனர்.
*******************
நகர்ப்புற வேலையின்மை 17.4 சதவிகிதமாக உயர்வு!
2021 மே 23 வரையிலான காலத் தில், நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை 14.73 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக, நகர்ப்புற வேலையின்மை 17.4 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது என்று இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.மார்ச் மாதம் 6.50 சதவிகிதமாக இருந்தவேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல் மாதமுடிவில் 7.97 சதவிகிதமாக உயர்ந்திருந்தது. தற்போது, அது மே 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 14.73 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் அதிகரித்ததே, நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை கடும் அடிவாங்கக் காரணம்என்று இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.மே 1 அன்று 9.60 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் மே 9 அன்று 11.77 சதவிகிதமாகவும், மே 16 அன்று 14.7 சதவிகிதமாகவும் இருந்தது. அதுதற்போது, ஒரே வாரத்திற்குள் மே 23இல் 17.4 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. எனினும், ஆச்சரியப்படத்தக்க வகையில், கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் 14.3சதவிகிதத்தில் இருந்து 13.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
*******************
ஆன்லைன் வேலைதேடல் 10 மடங்கு அதிகரிப்பு.. 2021 ஏப்ரலில் 966 சதவிகிதம் உயர்ந்தது...
கடந்த ஓராண்டாக தொடரும் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளால், பல லட்சம் பேர், ஆன்லைன் மூலமாகவீட்டிலிருந்தே பார்க்கும் வகையிலான வேலைகளைத் தீவிரமாகதேடத் துவங்கியுள்ளனர். குறிப்பாக, 2021 ஏப்ரலில் வீட்டிலிருந்தே பார்க்கும் வேலைகளுக்கான தேடல் அதிரடியாக உயர்ந்துள்ளது.வேலைதேடுதல் தளமான ‘இண்டீட்’ வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, வீட்டிலிருந்தே பார்க்கும் வேலைகளுக்கான தேடல் 2021 ஏப்ரல் மாதத்தில் 966 சதவிகிதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக பெங்களூருவைச் சேர்ந்தவர்கள், இதுபோன்ற வேலைகளுக்கான தேடுதலில் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். சுமார் 16 சதவிகிதம் பேர் வீட்டிலேயே செய்வதற்கான வேலைகளைத் தேடியுள்ளனர். இந்த வேலைதேடல், தலைநகர் தில்லியில் 11 சதவிகிதமாகவும், மும்பையில் 8 சதவிகிதமாகவும், ஹைதராபாத்தில் 6 சதவிகிதமாகவும், புனே-வில் 7 சதவிகிதமாகவும் இருந்துள்ளது.
வீட்டிலிருந்தே பார்க்கும் வேலைகளைத் தேடுவோரில், 60 முதல் 64 வரையிலான வயதினர், 15 முதல் 19 வரையிலான வயதினர், 40 முதல் 44 வரையிலான வயதினரின் எண்ணிக்கை தலா 13 சதவிகிதமாகவும், 35 முதல் 39 வரையிலான வயதினர் மற்றும் 20 முதல் 24 வயதினர் எண்ணிக்கை தலா 12 சதவிகிதமாகவும் உள்ளது.