கொரோனா தொற்று காலத்தில் இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. கொரோனா முதல் சமூக முடக்க காலத்தில் 12 கோடிக்கும் மேலான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளார்கள். இரண்டாவது அலையின் சமூக முடக்க காலத்தில் இதைவிட மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் - மே மாதங்களில் மட்டும் 2 கோடியே 20 லட்சம் பேர் வேலையிழந்துள்ளார்கள். வேலையின்மை 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இடிமேல் இடியாக பெட்ரோல்- டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. 2021 ஜனவரிக்கு பின் சில சட்டமன்றத்தேர்தல்களால் சில மாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதும் பெட்ரோலியப் பொருட்களினுடைய விலைகள் 54 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலைகளும், கட்டுமானப் பொருட்களும் கட்டுப்பாடின்றி விலைகள் உயர்ந்து வருகின்றன. இக்காலத்தில் சுமார் 10 முதல் 15 சதவிகிதம் அளவிற்கு விலைகள் உயர்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் பணவீக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி விகிதமும் வீழ்ந்துள்ளது.
அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள்,உப்பு, காய்கறிகள், முட்டை, இறைச்சி, மீன் போன்றஅனைத்து விலைகளும் தாறுமாறாக உயர்ந்திருக்கின்றன. உதாரணமாக சமையல் எண்ணெய் விலைகள் 60 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு 135 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ. 215/-ஆக உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை முற்றிலுமாக நீர்த்துப் போகச் செய்து விலைக்கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து விவசாயிகள் 200 நாட்களுக்கும் மேலாக போராடியும் மோடி அரசு செவிமடுக்க மறுத்து வருகிறது. இச்சட்டத்திருத்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் பதுக்கல்காரர்களும் அதானி போன்ற பெரும் கம்பெனிகளும் பெரும் லாபம் ஈட்டும் வகையில் பதுக்கல்கள் நடந்து வருகின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்வாக இருப்பதால் தான் பெட்ரோல் - டீசல்விலை உயர்வது தவிர்க்க முடியாததாக உள்ளது என மோடி அரசு உண்மைக்கு மாறான விபரங்களை பிரச்சாரம் செய்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், 2014 - 15ஆம் ஆண்டு ஒரு பேரல் கச்சாஎண்ணெய் விலை 46.59 டாலராகும். தற்போது இது66.95 டாலராக உயர்ந்துள்ளது. அதாவது, 43.7 சதமாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் பெட்ரோல்விலை 2014-15ஆம் ஆண்டு ரூ. 58.91 ரூபாயிலிருந்து இன்று ரூ. 100/-ரூபாய்க்கு மேல் கடந்து விட்டது. இதேபோல் டீசல் விலை 48.26 ரூபாயிலிருந்து இன்று ரூ. 98/-க்கு உயர்ந்துள்ளது. சற்றேறக்குறைய 100 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோலின் அடக்க விலை 37.65 ரூபாயாகும். முகவர்களுக்கான கமிசன் 3.80 ரூபாயாகும். மொத்தத்தில் ஒரு லிட்டர் அடக்க விலை ரூ. 40.45 ஆகும். ஆனால் தற்போது ரூ.100/-க்கு விற்பதற்கான காரணம் பெட்ரோல் மீது போடப்பட்டுள்ள கலால் வரியாகும். டீசலை பொறுத்தரையில் ஒரு லிட்டர் அடக்கவிலை ரூ. 40.23 ஆகும். முகவர் கமிசன் 2.59. ஆகடீசல் ஒரு லிட்டர் அடக்கவிலை ரூ. 42.82 ஆகும்.ஆனால், தற்போது 98/-ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் மீது விதிக்கப்படுகிற கலால் வரி மற்றும் மதிப்பீட்டு வரியாகும். ஒன்றிய அரசுக்கு அட்சயப்பாத்திரமாக பெட்ரோல்- டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரி என்பது மறுக்க முடியாத உண்மையாகும். 2014-15ல் கலால்வரியின் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் ரூ. 99,068 கோடி. இது 2019-20ஆம் ஆண்டில் ரூ. 2,87,540 கோடியாக உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசுக்கு வரி வருமானம் 125 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2020-21ஆம் ஆண்டில் பொதுமுடக்கம், போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையிலும் இந்த அளவுக்கு வரி வருமானம் ஒன்றிய அரசுக்கு உயர்ந்துள்ளது. இந்திய நாட்டில் பெட்ரோல் - டீசல் விலை அனுதினமும் உயர்ந்துகொண்டுள்ள போது இதர நாடுகளில் விலை உயர்வு ஏற்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாடு பெட்ரோல் டீசல்
(ஒரு லிட்டர் இந்திய ரூபாயில்)
பாகிஸ்தான் 51.15 52.18
வங்கதேசம் 76.43 55.82
இலங்கை 59.36 38.34
நேபாளம் 78.13 67.50
சீனா 81.85 71.88
எனவே, மோடி அரசாங்கத்தின் கலால் வரிகொள்ளையால் இந்திய நாட்டு குடிமகன் ஒவ்வொருவரின் அன்றாட வருமானம் கொள்ளையடிக்கப்படுகிறது.
இதேபோல, சமையல் எரிவாயு விலையும் ஓராண்டில் மட்டும் சிலிண்டருக்கு ரூ. 200/- உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான மானியம் முழுமையாக வெட்டி குறைக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் சமையல் எரிவாயுவுக்கான அரசாங்கத்தின் மானியம் ரூ. 2,573 கோடி ரூபாயாக இருந்தது.அதுவே, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ. 445 கோடியாகவும், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் ரூ. 345 கோடியாகவும், இறுதியாக ஆண்டு முடியும் கடைசி காலாண்டில் ரூ. 196 கோடியாக வேக வேகமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சமையல் எரிவாயு விலை றெக்கை கட்டி பறந்துள்ளது.
2021-ல் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் கடந்த ஆண்டு பெட்ரோலி யப் பொருட்களுக்காக அளிக்கப்பட்டிருந்த மானியம் ரூ. 40,915 கோடியிலிருந்து, நடப்பு ஆண்டிற்கு 14,073 கோடியாக குறைக்கப் பட்டு விட்டது. இந்திய நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் வேலையின்மை ஆகிய கொடுமைகளை எதிர்த்து இரண்டு வார காலம் கண்டன இயக்கங்கள் நடத்திட அகில இந்திய இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. இவ்வியக்கத்தை தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பதால் ஜூன் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் தமிழகம் முழுவதும் வட்ட, ஒன்றியதலைநகரங்களில் சக்தியான ஆர்ப்பாட்டம் நடத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ (எம்.எல்)லிபரேசன் ஆகிய கட்சிகள் தீர்மானித் துள்ளன. மாவட்டங்களில் இக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இம்மூன்று நாட்களிலும் தமிழகத்தில் 750க்கும்மேற்பட்ட மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. மோடி அரசின் தடித்தன மான நடவடிக்கைகளை தவிடுபொடியாக்கும் வகையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இந்தகண்டன இயக்கத்தில் பங்கேற்க வேண்டு கிறோம்.
இந்த செய்தி 3-ஆம் பக்கம் தொடர்ச்சியாக பிரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்கும் வசதிக்காக இதே தொகுப்பில் தொடர்ச்சிகள் இணைத்து தொகுக்கப்பட்டுள்ளன.