india

img

மலபார் கிளர்ச்சி தலைவர்கள் 387 பேரின் பெயர்கள் நீக்கம்..... விடுதலைப் போராட்ட தியாகிகள் பட்டியலில் இருக்கக் கூடாதாம்...

புதுதில்லி:
இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகள் பட்டியலில் இருந்து வாரியம்குன்னத் குன்ஹமது ஹாஜி மற்றும் அலி முஸ்ல்யார் உட்பட 387 மலபார் கிளர்ச்சி தலைவர்களை நீக்கிட வேண்டும் என  இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎச்ஆர்) பரிந்துரைத்துள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் ஐசிஎச்ஆரால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ‘மாப்ளா எழுச்சி’ என வர்ணிக்கப்படும் மலபார் கிளர்ச்சியானது, சுதந்திரப் போராட்டம் அல்ல என்ற ஆர்எஸ்எஸ் காவிக் கூட்டத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவே இந்தக் குழு நியமிக்கப்பட்டது என்று விமர்சனம் ஏற்கெனவே எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 1921 மலபார் கிளர்ச்சி சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதி அல்ல; மாறாக, வகுப்புவாதக் கலவரங்கள்தான் என இந்தக் குழு கண்டுபிடித்துவிட்டதாம். கிளர்ச்சியின் ஒரு பகுதியாக ஆங்கிலேய எதிர்ப்பு முழக்கங்கள் எதுவும் எழுப்பப்படவில்லை என்றும் இந்த குழு கூறிக் கொண்டுள்ளது. மேற்கண்ட கிளர்ச்சியானது ஒரு கலிபாவை நிறுவும் முயற்சியாகும் என்றும் கிளர்ச்சி வெற்றிகரமாக இருந்திருந்தால், கலிபா நிறுவப்பட்டிருக்கும்; அந்த நிலப்பரப்பை நாடு இழந்திருக்கும்”என்று அந்த அறிக்கை கூறுகிறது.

பல கைதிகள் காலரா உள்ளிட்ட நோய்களால் இறந்துள்ளனர், எனவே தியாகிகளாக கருத முடியாது என்று குழு வாதிட்டது. விசாரணைக்குப் பிறகு ஒரு சிலருக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்டதாக குழு கூறியது. இந்தக் குழு அக்டோபர் மாதத்திற்குள் புதுப்பிக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலை வெளியிடும்போது, மலபார் கிளர்ச்சித் தலைவர்களை விலக்க முடிவு செய்துள்ளது.  

                                      *****************

மலபார் கிளர்ச்சி விடுதலைப் போராட்டத்தின் பகுதியே :  ஏ.விஜயராகவன்

இந்நிலையில், “மல பார் கிளர்ச்சியை புறந்தள்ளு வோரிடம் காணப்படுவது ஆங்கிலேயஆட்சிக்கு ஆதரவான மனநிலையே” எனக் குறிப்பிட்டு ஆர்எஸ்எஸ் கருத்தை நிராகரித்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில பொறுப்பு செயலாளர் ஏ.விஜயராகவன்.இதுதொடர்பாக மலப்புரத்தில் செவ்வாயன்று (ஆக.24) செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறிய தாவது: மலபார் கிளர்ச்சியை பாரீஸ் கம்யூனுடன் தோழர் ஏ.கே.கோபாலன் ஒப்பீடு செய்தார். அதன் பெயரில் அவரை ஆங்கிலேய காவல்துறை கைது செய்தது. மலபார்கிளர்ச்சியை வகுப்புவாத கலவரமாக சித்தரிக்கவே ஆங்கிலேயர் முயன்றனர். அதே ரீதியில் முன்செல்லவே ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. மலபார் கிளர்ச்சி, விடுதலைப் போராட்டத்தின் பகுதியேதான். அப்போராட்டத்தில் வெளிப்பட்ட ஆங்கிலேய எதிர்ப்பை புறக்கணிக்க முடியாது என்றும் விஜயராகவன் கூறினார்.  

ஒன்றிய அரசு பெயர்களை நீக்கிவிட்டால் மலபார் கிளர்ச்சி வரலாற்றில் இல்லாமல் போய்விடாது. வரலாற்றைவகுப்புவாத ஊக்குவிப்புக்கு பயன்படுத்த முயற்சிப்போருக்கு அந்த போராட்டம் எரிச்சலூட்டுகிறது. அடிப்படையில் அது நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பாகும். ஆழமாக போராட்டத்தை ஆய்வு செய்த இந்திய மற்றும் வெளிநாட்டு வரலாற்றாசிரியர்கள் இந்த உண்மையை சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்கள் அனைவரும் பிரிட்டிஷ் எதிர்ப்பு உணர்வையே முதலில் வைத்துள்ளனர்.கம்யூனிஸ்ட் கட்சி 1946 இல் ‘1921- அழைப்பும் எச்சரிக்கையும்’ என்ற தலைப்பில் வெளியிட்ட தீர்மானத்தில் இது விளக்கப்பட்டுள்ளது. நிலப்பிரபுத்துவத்திற்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பை வழங்கியவர்கள் ஆங்கிலேயர்கள். மலபார் கலகம் அவர்களின் பயங்கரவாதச் சுரண்டலுக்கு எதிராக மிகவும் ஒழுங்க மைக்கப்பட்ட போராட்டம். அவர்கள் எழுப்பிய பிரச்சனைகள் பின்னர் தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக வந்தது குறிப்பிடத்தக்கது என்றும் விஜயராகவன் கூறினார்.