கழிவுநீர் தொட்டி மரணங்கள் குறித்து ஒன்றிய அரசு வேளியிட்டுள்ள தரவுகளை சுட்டிக்காட்டி, கழிவுநீர் தொட்டி மரணங்கள் நிஜமாகவே ஒழிக்க இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக காத்திருக்கிறீர்கள் என்று சிபிஎம் எம்.பி ஜான் பிரிட்டாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செயத் 315 பேர் மரணம். இவை விபத்துகள் அல்ல. இவை தடுக்கக்கூடியவை. ஆனால்மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. இது நிறுவன ரீதியான தோல்விகளையே காட்டுகிறது. ஆனால், மனிதர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் நடைமுறையை ஒழித்துவிட்டதாக அரசு கூறுகிறது.
மொத்த உயிரிழப்புகளில் 77.5% உயிரிழப்புகள் 7 மாநிலங்களில் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் 53 உயிரிழப்புகள், ஹரியானாவில் 43 உயிரிழப்புகள், தமிழ்நாட்டில் 38 உயிரிழப்புகள், உத்தரப் பிரதேசத்தில் 35 உயிரிழப்புகள், தில்லியில் 26 உயிரிழப்புகள், குஜராத்தில் 25 உயிரிழப்புகள், ராஜஸ்தானில் 24 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.
"ஒழிப்பு" நிஜமாவதற்கு இன்னும் எத்தனை பேர் இறக்க வேண்டும்? இதில் இறந்தவர்களின் சாதியைக் கூட அரசு பதிவு செய்வதில்லை - அதை "தொழில் அடிப்படையிலானது" என்று கூறுகிறது. ஏனெனில், அதை ஒப்புக்கொண்டால் உண்மை வெளிப்பட்டுவிடும்.
இந்தியாவில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியும், அபாயகரமான துப்புரவுப் பணிகளும் பெருமளவில் விளிம்புநிலை சமூகத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், இவை வரலாற்று ரீதியான சாதி அடிப்படையிலான தொழில் பாகுபாட்டு முறைகளில் வேரூன்றியுள்ளன."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
