புதுதில்லி:
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டத்தில் சுகாதார ஊழியர்கள் உட்பட மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.
மார்ச் 1 முதல் இரண்டாம் கட்டப் பணிகள் துவங்கி, 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.அரசு மருத்துவமனைகளில் இலவச மாகவும் தனியார் மருத்துவமனைகளில் ரூ. 250 கட்டணத்திலும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது.இந்நிலையில் “இந்தியா டுடே” செய்தி ஊடக இயக்குநர் ராகுல் கன்வால், உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா தடுப்பூசிகள் மிகவும் மலிவான விலைக்கு கிடைப்பதாக டுவிட்டரில் அண்மையில் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார். தனது சேனலால் உருவாக்கப்பட்ட ஒரு விளக்கப்படத்தை வெளியிட்டு, சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளின் தடுப்பூசி விலையை இந்திய தடுப்பூசி விலைகளுடனும் ஒப்பீடு செய்திருந்தார்.இதையே வசதியாகப் பிடித்துக் கொண்ட பாஜக தலைவர்களும், மோடி அரசுதான் உலகிலேயே மலிவான விலையில் கொரோனா தடுப்பூசியை வழங்குகிறது.சாதாரண ஒரு குடிமகன் வாங்கும் விலைக்கு இந்தியாவில் தடுப்பூசி கிடைப்பது, பாஜக அரசின் சாதனை என்று பிரச்சாரத்தில் இறங்கினர்.
ஆனால், “இந்தியா டுடே” ஊடகத்தின் இயக்குநர் ராகுல் கன்வால் அளித்த தகவலில் உண்மை இல்லை என்று புதிய தகவல்கள்வெளியாகியுள்ளன.தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து, ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்கள், கொள்முதல் செய்யும் விலையைக் குறிப்பிட்டு, இதனடிப்படையில், இந்திய அரசாங்கம் வாங்கும் விலை மலிவாக உள்ளது என்று ராகுல் கன்வால்கூறியிருக்கிறாரே தவிர, ஒரு இந்திய குடிமகனுக்கு சந்தையில் என்ன விலைக்கு கிடைக்கிறது என்பதை அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது, ‘சீரம் இன்ஸ்டிடியூட்’ (Serum Institute) இந்திய அரசுக்கு 212 முதல் 292ரூபாய் விலைக்கு கொரோனா தடுப்பூசிகளை (Single dose)வழங்குகிறது. ஆனால் அதே மருந்தை வெளிச்சந்தையில் மருந்தை ரூ. 600 முதல் 1000 ரூபாய் வரை விற்கிறது. இரண்டுமுறை இந்த ஊசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனும்போது, நபர் ஒருவருக்கு ரூ. 2 ஆயிரம் செலவிட வேண்டிய கட்டாயம் இந்தியாவில் உள்ளது. இதனை ‘இந்தியா டுடே’வின் இயக்குநர் மறைத்து விட்டார்.அதுமட்டுமல்ல, சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதர் பூனாவல்லாவும், “கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை, முதல் நூறு மில்லியன் டோஸ்கள் மட்டுமே ரூ. 200 என்ற சிறப்பு விலையில் கொடுப்போம். பின்னர் டெண்டர் விடப்பட்டு, வெவ்வேறு விலைகளிலேயே தடுப்பூசியை வழங்குவோம்” என்று தெரிவித்துள்ளதால், முதல் நூறு மில்லியன் டோஸ்களுக்கு பிறகு, யாராக இருந்தாலும் ரூ. 2000 வரை செலவிட்டே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நிலைதான்உள்ளது.உண்மையாகச் சொன்னால், மற்ற நாடுகளில் இலவசமாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் மட்டும்தான்கட்டணம் பெற்றுக்கொண்டு போடப்படுகிறது என்று கூறப்படுகிறது.
சீன சுகாதார அமைச்சகத்தின் வலைத்தளமானது, அனைத்து சீன மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறுகிறது. அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைத் துறையின் (எச்.எச்.எஸ்) கீழ் உள்ள நோய்க் கட்டுப்பாடுமற்றும் தடுப்பு மையமும் (சி.டி.சி) தடுப்பூசிகள் எந்த கட்டணமும் இன்றி வழங்கப்படும் என்று கூறுகிறது. ஐரோப்பிய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமும், பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் தடுப்பூசியை இலவசமாக வழங்குகின்றன என்று கூறுகிறது. ரஷ்ய அரசாங்க வலைத்தளமும் தனது நாட்டில் தடுப்பூசி செலுத்துதல் இலவசம் மற்றும் தன்னார்வமானது என்று கூறுகிறது. சவூதி அரேபிய சுகாதார அமைச்சின் வலைத்தளமும் அனைத்து குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இந்த தடுப்பூசி இலவசம் என்று கூறுகிறது. ஆனால், இலவச தடுப்பூசி வழங்குவோம் என்று உறுதியளிக்காத ஒரே நாடு இந்தியா மட்டுமே என்றும்செய்திகள் கூறுகின்றன.