புதுதில்லி:
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு மாநிலங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் வடமாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. குவியல் குவியலாக உடல்கள் எரிக்கப்படும் காட்சிகள் அதிர்ச்சியை தருகிறது.நாடுமுழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. இந்நிலையில், தலைநகர் தில்லி மருத்துவமனைகள் மற்றும் வட மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
குறிப்பாக தில்லியில் பல இடங்களில் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களின் முன்புமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக சிகிச்சையில் அனுமதிக்கும் முன்னதாகவே நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே உயிரிழக்கும் கொடுமை நிகழ்கிறது.தில்லியில் குவியல் குவியலாக சடலங்கள் எரிக்கப்பட்டு வரும் சம்பவத்தை பிரபல வெளிநாட்டு ஊடகம் படம் பிடித்து வெளியிட்டுள்ளது. அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.