புதுதில்லி:
இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே மே 1 முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய பாஜக அரசு அறிவித்த உடனேயே, இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ என்ற தடுப்பூசியின் விலையை, அதனை தயாரித்து வழங்கும் ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனம் பல மடங்கு உயர்த்தியது.
மத்திய அரசுக்கு ஒரு டோஸ் ரூ. 200 என்ற விலைக்கு, கோவிஷீல்ட் தடுப்பூசியை வழங்கிவரும் சீரம் நிறுவனம், மாநில அரசுகளுக்குவிலையை ரூ. 400 ஆகவும், இதையே தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600 என்றும் உயர்த்தியது. இது இந்தியாவில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.ஆனால், 600 ரூபாய் என்ற விலையே குறைவுதான் என்றும், சொல்லப்போனால் 1000 முதல் 1500ரூபாய்க்கு தடுப்பூசியை நாங்கள் விற்க வேண்டும் என்றும் சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவாலா கூறியிருந்தார்.
சீரம் நிறுவனம் ஒப்பந்த முறையில் இந்த தடுப்பூசியை தயாரித்தாலும், ஒரு டோஸூக்கு ரூ. 150 என்ற லாபத்தை ஈட்டுகிறோம். நாங்கள் எந்த லாபத்தையும் ஈட்டவில்லை என்று நான் கூறமாட்டேன். ஆனால்நாங்கள் ‘சூப்பர் லாபம்’ என்றுஅழைப்பதை தியாகம் செய்துள் ளோம் என்றும் தெரிவித்திருந்தார்.பிரதமர் நரேந்திர மோடியும், அவரது கட்சியினரும் ஒருபடி மேலே சென்று, உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் மிகக் குறைவான - மலிவான விலைக்கு தடுப்பூசி வழங்கப் படுவதாக தேர்தல் பிரச்சாரங்களில் முழங்கி வந்தனர்.
இந்நிலையில், உலகின் வேறெந்த சந்தையில் விற்கப்படும் தடுப்பூசியின் விலையைக் காட்டிலும், இந்தியாவில் விற்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலைதான் அதிகம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு நிறுவனங்களின் கண்டுபிடிப்புதான் கோவிஷீல்ட்என்ற நிலையில், அஸ்ட்ராஜெனகாவிடம் இருந்து நேரடியாக மருந்துகளைப் பெறும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் களில் இந்த மருந்து குறைவான விலைக்கே விற்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டுமே இது அதிகவிலைக்கு விற்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் தொகுத்த தரவுகளின்படி, அஸ்ட்ரா ஜெனகாவில் சிறிய முதலீடு செய்த இங்கிலாந்து, ஒரு டோஸுக்கு சுமார் 3 டாலர் செலுத்துகிறது. 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இதே தடுப்பூசி ஒரு டோஸ் 2.15 டாலர் முதல் 3.50 டாலர் வரையிலான விலைக்கே விற்கப்படுகிறது. அமெரிக்கா ஒரு டோஸுக்கு 4 டாலர் என்ற அளவில் வழங்குகிறது.
ஆனால், அமெரிக்காவில் விற்கப்படுவதைக் காட்டிலும் அதிகவிலையில் கோவிஷீல்டை இந்தியாவில் சீரம் நிறுவனம் விற்றுக் கொண்டிருக்கிறது. மாநில அரசின் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஒவ்வொரு இந்தியரும் கோவிஷீல்ட் டோஸுக்கு ரூ. 400 (5.30 டாலருக்கு மேல்) பணம் செலுத்தவேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரூ. 600 ஆக உள்ளது.வங்கதேசம், சவூதி மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளில் விநியோகிக்கப்படும் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி விலையை காட்டிலும், இந்தியாவில் அதிகவிலைக்கு கோவிஷீல்ட் விற்பனை செய்யப்படுகிறது.இந்தியாவில் தடுப்பூசியின் விலையை ரூ. 400 என அதிகரித்துக் கொள்ள மத்திய அரசு ஒப்புக் கொண்டதா? என்ற கேள்விக்கு,மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் மற்றும் சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆகியோர் இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.