புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்று பரவல் எதிரொலியாக செப்டம்பர் மாதம் முழுவதுமாக பண்டிகைகளுக்காக மக்கள் கூட்டமாக கூடுவதை அனுமதிக்கக் கூடாது என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் மாதம் முழுவதும் பண்டிகைகளுக்காக மக்கள் பெருமளவு கூடுவதை அனுமதிக்கக் கூடாது. கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. பண்டிகைகளுக்காக பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவது கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகுக்கும். எனவே பண்டிகைகளின் போது மக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். கூட்ட நெரிசல் நிறைந்தஅனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். பரிசோதனை, தொற்றை கண்டறிதல், சிகிச்சை கண்காணிப்பு, தடுப்பூசி ஆகிய 5 வழி செயல்முறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.