புதுதில்லி:
2019-20 நிதியாண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் 2 ஆயிரத்து 555 கோடி ரூபாயை பாஜக நன்கொடையாக அள்ளிக் குவித்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, 2019-20 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள்மூலம் அளிக்கப்பட்ட ஒட்டுமொத்த நன் கொடையில் சுமார் 76 சதவிகிதத்தை பாஜக கைப்பற்றியுள்ளது.2019-20 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலம் பெற்ற தேர்தல் நன்கொடை குறித்த தகவல்களை ‘என்டிடிவி’ (NDTV) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில், மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 2019-20ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மொத்தம் 3 ஆயிரத்து 355 கோடி ரூபாய் பல்வேறு கட்சிகளுக்கு நன்கொடையாக கிடைத்துள்ளது. இதில் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 555 கோடி ரூபாயை பாஜக மட்டுமே நன்கொடையாகப் பெற்றுள்ளது. இது தேர்தல் பத்திரங்கள் மூலமான ஒட்டுமொத்த நன்கொடைகளில் 76 சதவிகிதம்ஆகும். முந்தைய 2018-19 ஆம் ஆண்டில், தேர்தல் பத்திரங்கள் மூலம் 1450 கோடி ரூபாய் அளவிற்கே பாஜக நன்கொடை பெற்றிருந்தது. இந்நிலையில், 2019-20 நிதியாண்டில் அது ரூ.2 ஆயிரத்து 555 கோடியாக- சுமார் 75 சதவிகிதம் அதிகரித் துள்ளது. இதேகாலத்தில், மற்றொரு தேசியக் கட்சியான காங்கிரசுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமான நன்கொடை 17 சதவிகிதம் குறைந்துள்ளது. 2018-19-இல் 383 கோடி ரூபாயைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரஸ் பெற்றிருந்தது. அது 2019-20ஆம் நிதியாண்டில் 318 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.மேலும், 2019-20 நிதியாண்டில் தேர் தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட ஒட்டுமொத்த நன்கொடையில் காங்கிரஸ் பெற்றது வெறும் 9 சதவிகிதம் மட்டுமே ஆகும்.
காங்கிரசுக்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் 100 கோடியே 46 லட்சம், திமுக ரூ. 45 கோடி, சிவசேனா ரூ. 41 கோடி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ. 29 கோடியே 25 லட்சம், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி ரூ. 18 கோடி, லாலு பிரசாத்யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ரூ. 2 கோடியே 50 லட்சம் என தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளைப் பெற்றுள்ளன.தேர்தல் பத்திரங்கள் என்பது குடிமக்கள் அல்லது கார்ப்பரேட் நிறுவனங் கள், அரசியல் கட்சிகளுக்கான தங்களின்நன்கொடையை வங்கிகள் மூலம் அளிப்பதற்கான கருவியாகும். 2017-ஆம் ஆண்டு,ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி பட்ஜெட் உரையின்போது, இந்ததிட்டத்தை அறிவித்தார். வங்கிகள் வழியாக இந்த நிதி அரசியல் கட்சிகளுக்கு செல்வதால், இது கறுப்புப் பணம்இல்லை என்றாலும், இந்த நன்கொடையை வழங்கியவர்களின் பெயர்கள் இடம்பெறாது என்பதால், மறைமுகமாக இது கறுப்புப் பண நடவடிக்கையை ஊக்குவிக்கும் செயல்தான் என்று இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.எனினும், அது கண்டுகொள்ளப்படவில்லை.அதற்கேற்பவே, தேர்தல் பத்திரங்கள்மூலம் பாஜக தற்போது பெற்றுள்ள மொத்த வருவாயில் சுமார் 64 சதவிகிதம்- யார் கொடுத்தார்கள் என்பதற்கான விவரங்கள் இல்லாத அநாமதேய நன்கொடையாக அமைந்துள்ளன. இந்தவகையில் மட்டும் ஆயிரத்து 612 கோடியே4 லட்சத்தை பாஜக திரட்டியுள்ளது.