india

img

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை – ஒன்றிய அரசு திட்டவட்டம்!

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி நீண்ட காலமாக கோரி வருகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அக்கட்சி தனது கோரிக்கையை வலியுறுத்தியது. இந்நிலையில், ஒன்றிய அமைச்சர்கள் குழு அறிக்கை 2012இன் படி பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என்று மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராம்பிரித் மண்டலுக்கு, ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுதியுள்ள கடிதத்தில், “கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய காரணங்களுக்காக கடந்த காலங்களில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் சில மாநிலங்களுக்கு திட்ட உதவிக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கியது. மலைப்பாங்கான மற்றும் கடினமான நிலப்பரப்பு, குறைந்த மக்கள் தொகை அடர்த்தி, பழங்குடியினர் கணிசமாக வசிப்பது, அண்டை நாடுகளுடனான எல்லையில் இருக்கக் கூடிய மாநிலங்கள், பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் பின்தங்கிய நிலை, போதிய அளவு நிதி ஈட்டுவதற்கு சாத்தியமற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இத்தகைய சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

இத்தகைய காரணிகள் மற்றும் மாநிலத்தின் மாறுபட்ட சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவ்விஷயத்தில் முடிவு எடுக்கப்பட்டது. பீகாரின் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பரிசீலித்த ஒன்றிய அமைச்சர்கள் குழு 30 மார்ச் 2012 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது. தற்போதுள்ள தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் அளவுகோல்களின் அடிப்படையில், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என்பதைக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், ஐக்கிய ஜனதா தளத்தின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது.