india

img

டிச.30-ல் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிக்கு ஒன்றிய அரசு துரோகம்... விவசாயிகள் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு...

புதுதில்லி:
2020 டிசம்பர் 30 அன்று விவசாயிகளின் பிரதிநிதிகளுக்கு அளித்த வாக்குறுதிக்கு ஒன்றிய பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது என்று விவசாயிகள் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.விவசாயிகள் நாடாளுமன்றத்தின் ஒன்பதாம் நாள் செவ்வாய் அன்றும் தொடர்ந்தது. தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் அவையின் நிகழ்ச்சிநிரல் ஒவ்வொன்றாகப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.செவ்வாய் அன்று நடைபெற்ற அமர்வின்போது விவசாயிகள் வைக்கோல்களை எரிக்கும் பிரச்சனை எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக ஒன்றிய அரசாங்கம் பல்வேறு பெயர்களில் அவசரச்சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளைக் கிரிமினல்கள் போல் நடத்துவதை இன்றைய அமர்வில் பேசியவர்கள் எடுத்துக் கூறினார்கள். மேலும் ஒன்றிய அரசாங்கம் கொண்டுவந்த அவசரச்சட்டம் இப்போது நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்ற அமர்வில் சட்டமுன்வடிவாகத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.

ரூ.1கோடி இழப்பீடு தண்டனை பிரிவு சேர்ப்பு
மேலும் இந்தப் பிரச்சனை தொடர்பாக 2020 டிசம்பர் 30 அன்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் ஒன்றிய அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளுக்கு அது துரோகம் செய்துவிட்டதையும் விவசாய நாடாளுமன்றத்தில் பேசிய உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்கள். மேலும் இந்தச் சட்டமுன்வடிவில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதற்காக விவசாயிகள் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு அளிக்க வேண்டும் என்று தண்டனைப் பிரிவு சேர்க்கப்பட்டிருப்பதையும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி இந்த ஷரத்துக்களை நீக்கிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

விவசாயிகள் நாடாறுமன்றத்தின் விருந்தினர்களாக புகழ்பெற்ற குடிமக்களையும், வல்லுநர்களையும் அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.ஹரியானா மாநிலத்தில் பாஜக தலைவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுவது தொடர்கிறது என்று கூறப்பட்டது. (ந.நி.)

படக்குறிப்பு : விவசாய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசியகீதத்திற்கு மரியாதை செலுத்தும் காட்சி.