இந்தூர்:
உத்தரப்பிரதேசம் ஹர் தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தஸ்லீம் அலி. இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரின் கோவிந்த் நகர் என்ற பகுதியில் வளையல் விற்று கொண்டிருந்தார்.அப்போது, இந்துத்துவா கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கி, அலியிடம் இருந்த ரூ. 10ஆயிரம் பணம் மற்றும் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான வளையல் களை பறித்துக் கொண்டதுடன், செல்போனையும் உடைத்து நொறுக்கினர். பின்னர், “இந்துக்கள் வசிக்கும் பகுதியில் வியாபாரம் செய்ய வரக்கூடாது” எனமிரட்டி விரட்டியடித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மதவெறியர்களின் தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்ததுடன், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றுதஸ்லீம் அலியின் உறவினர்கள் காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால், ம.பி. பாஜக அரசின் காவல்துறையோ, குற்றவாளிகளைக் கைது செய்வதற்குப் பதில், தாக்குதலுக்கு உள்ளான தஸ்லீம் அலி மீதே, தற்போது 14 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.
“தஸ்லீம் அலி இந்துப் பெயரைக் கூறிக் கொண்டு அப்பகுதியில் வளையல் விற்று வந்துள்ளார். அதனாலேயே தாக்குதல்நடந்தது” என்று மாநில உள் துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா முன்பே சம்பவத்தை நியாயப்படுத்தி இருந்தார். இந்தப் பின்னணியில், தாக்குதல் நடந்து 10 மணிநேரத்திற் குப் பிறகு, பாதிக்கப்பட்ட தஸ்லீமையே ம.பி. காவல்துறை குற்றவாளி ஆக்கியுள்ளது.“3 வெவ்வேறு அடையாள அட்டைகளுடன் தஸ்லீம் அலி வியாபாரத்தில் ஈடுபட்டார். பெண் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றபோது, அப்பெண்ணின் ஆறாவது படிக்கும் 13 வயது பெண் குழந்தையை “நீ அழகாய் இருக்கிறாய்” என்று சொல்லி தொட்டு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். இதுகுறித்து அச்சிறுமி புகார் அளித் துள்ளார்” என்று கூறி, போலிச் சான்று வைத்திருத்தல் மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.