புதுதில்லி:
கொரோனாவால் உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 6 வாரங்களில் உருவாக்க வேண்டும் என்றும் புதன்கிழமையன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்,வழக்கறிஞர்கள் கவுரவ் குமார் பன்சல்,ரீபாக் கன்சல் ஆகியோர் கடந்த மே மாதம் பொதுநல வழக்கு தொடர்ந் திருந்தனர்.
இந்த வழக்குகளில்தான், நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதி மன்ற அமர்வு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.பிருந்தா காரத், அவரது மனுவில் குறிப்பிட்டிருந்தபடி “பேரழிவு மேலாண்மை சட்டப்பிரிவு 12-இன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கட்டாயமாக இழப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டுத்தொகை வழங்குவது என்பது அரசின் விருப்பப்படியா னது அல்ல, சட்டப்படியான கட்டாயம்” என்பதை நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
கொரோனா உயிரிழப்புகளுக்கு தில்லி அரசு தலா 50 ஆயிரமும், பீகார் அரசு 4 லட்சம் ரூபாயும், மத்தியப் பிரதேசம் தலா ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்கி வருகிறது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி அறிவித்திருப்பதோடு, அவர்களின் கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளன. மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டே உச்ச நீதிமன்றம் தனது உத்தரவைப் பிறப்பித்தது.
இது தற்போது ஒன்றிய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த முடியுமா, பொருளாதார சிக்கல்கள் என்னென்ன, தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்யலாமா? என்பது குறித்து, சட்டம் மற்றும் நிதியமைச்சகங்களுடன் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஆலோசனை யில் இறங்கியுள்ளது.இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை- வியாழக்கிழமை வரை 4 லட்சத்து 312 ஆக உள்ளது. இதில் ஒருவரது குடும்பத்திற்கு தலா 1 லட்ச ரூபாய்குறைந்தபட்ச நிதி வழங்குவது என்றால்,ஒன்றிய அரசுக்கு சுமார் ரூ. 4000 கோடி செலவாகும். இதுவே மனுதாரர்கள் கூறியது போல 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது என்றால், சுமார் 16 ஆயிரம்கோடி ரூபாய் செலவாகும் என்று புள்ளிவிவரங்கள் வெளியான பின்னணி யில், இதனை வழங்குவது சாத்திய மானதுதான் என்று நிதித்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.