புதுதில்லி:
உலகின் மிக நீண்ட, மிகப்பிரம்மாண்டமான, மிக மிகஒற்றுமை மிகுந்த, மிகவும் அமைதியான விவசாயிகளின் பேரெழுச்சி ஜுன் 14 (இன்று) தனது 200வது நாளை எட்டுகிறது.
இது இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு இந்த தேசம் கண்டுள்ள மிக மிக வலுவான போராட்டம் என்றால் மிகையல்ல. அரசாங்கத்தின் கொள்கை யை எதிர்த்து மட்டுமல்ல; அந்த கொள்கைக்கு பின்னணியில் உள்ள கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் கொடிய சுரண்டலையும் அதற்காக அது மேற்கொள்ளும் கொடூரமான ஒடுக்குமுறையையும் எதிர்த்த, விரிவான திட்டமிடலுடன் கூடிய, எந்த ஒடுக்குமுறையாலும் சிறிதளவு கூடதகர்த்துவிட முடியாத பேரெழுச்சி ஆகும். நரேந்திர மோடி அரசு கொண்டுவந்துள்ள மூன்று கொடிய வேளாண்சட்டங்களை எதிர்த்து அகில இந்தியவிவசாயிகள் சங்கம், அதன் தலைமையிலான அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு, அதில் இணைந்துள்ள ஏராளமான சங்கங்கள்; இவற்றுடன் இணைந்து கொண்ட பல்வேறு மாநிலங்களின் அனைத்து விவசாயிகள் சங்கங்கள், பாரதிய கிஷான் யூனியனின் பல்வேறு பிரிவுகள் உள்பட சுமார் 500 விவசாயிகள் சங்கங்கள் இணைந்து கொண்டன.
இதுவரையிலும் சுதந்திர இந்தியாவில் இத்தனை விவசாயிகள் அமைப்புகள் இணைந்து பிரம்மாண்டமான ஒற்றுமையை கட்டமைத்து, தலைநகர் தில்லியின் 5 எல்லைகளான சிங்கூர், திக்ரி,காஸிப்பூர், பல்வால் மற்றும் ஷாஜகான்பூர் ஆகிய எல்லைப்பகுதி களில் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர். இந்தப் போராட்டம் சில நாட்களில் முடிந்துவிடும் என்று நரேந்திர மோடி அரசு மனக்கணக்கு போட்டது. ஆனால் அதைத் தகர்த்தது விவசாயிகளின் எழுச்சி.
வேளாண் சட்டங்களை ரத்துசெய் என்ற ஒற்றை கோரிக்கை யோடு லட்சங்கள், 10 லட்சங்களாக, பல பத்து லட்சங்களாக, ஒவ்வொருநாளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தில்லி ஸ்தம்பித்தது. மோடி அரசு மிரண்டது. அடக்குமுறையை ஏவியது. விவசாயிகளைப் பிரித்தாள முயற்சி செய்தது. பேச்சுவார்த்தை என்ற பெயரில் இழுத்தடித்தது. எதற்கும் கலங்கவில்லை விவசாயிகள். தில்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை, சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தொடர்ச்சியான அறைகூவல்களை ஏற்று நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், பல்வேறு வர்க்க வெகுஜன அமைப்புகள் என ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கமும் ஆதரவுக்குரல் எழுப்பி வருகிறது. நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றன.
விவசாயிகளுக்கு ஆதர வாக நிற்கின்றன. போராட்டக் களத்தில் விவசாயிகளின் அதிகபட்ச ஒற்றுமை கட்டப்பட்டிருக்கிறது. களத்திலேயே கடும் வெயிலிலும், கடும் குளிரிலும், கடும் மழையிலும் மனம் தளராமல் விவசாயிகள் உறுதியோடு தங்களது போராட்டத்தை தொடர்கிறார்கள். கொரோனா ஊரடங்கு, தொற்று பாதிப்பு என்ற பிரச்சனைகள் எல்லாம் வந்தபோதி லும், அதைக் காரணம் காட்டி போராட்டத்தை கைவிடச் செய்ய அரசு பல சூழ்ச்சிகள் மேற்கொண்ட போதிலும், அத்தனையையும் எதிர்கொண்டு விவசாயிகள் எழுச்சி தொடர்கிறது. இந்தக் களத்தில் வயது முதிர்வு, திடீர் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுமார் 480 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். எத்தனை இழப்புகள் வந்த போதிலும், அறுவடை உள்ளிட் ட பல்வேறு நிலைமைகள் ஏற்பட்ட போதிலும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான்உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களி லிருந்து குவிந்துள்ள விவசாயிகள், சுழற்சி முறையில் தங்களது கிராமங்களுக்குச் சென்று விவசாயப் பணிகளையும் கவனித்துக் கொண்டு, தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 2021 மே 26 அன்று இந்தப் பிரம்மாண்ட எழுச்சி தனது ஆறாவது மாதத்தை எட்டியது. இந்த எழுச்சி தற்போது 200வது நாளை எட்டுகிறது.
200வது நாளையொட்டி போராட்டக் களங்களிலும் நாடுமுழுவதிலும் எழுச்சிமிகு கருத்தரங்குகள், அடையாள ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஜுன் 14(இன்று) மாலை 5.30 மணியளவில் இணையவழி கண்டனப் பொதுக்கூட்டம், மாநிலஒருங்கிணைப்பாளர் கே.பால கிருஷ்ணன் தலைமையில் நடை பெறுகிறது. அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.