பதஞ்சலி, டாபர் உள்ளிட்ட 10 தேன் உற்பத்தி நிறுவனங்கள் செயற்கை சர்க்கரைப் பாகைச் பயன்படுத்திவருவது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் உள்ள ஆய்வகம் ஒன்றில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், இந்தியாவில் விற்பனையில் உள்ள 13 முன்னணி நிறுவனங்களின் தேன் மாதிரிகளை சோதனை செய்தது. இதில் டாபர், பதஞ்சலி, ஜண்டு, பைத்யநாத், அப்பிஸ் ஹிமாலயா, ஹிட்கரி உள்ளிட்ட 10 முன்னணி தேன் தயாரிக்கும் நிறுவனங்களின் மாதிரிகள் சோதனையில் தோல்வியடைந்துள்ளன.
அணுகாந்த ஒத்ததிர்வு என்ற நவீன முறையில் சோதனை செய்தபோது இந்த தேன் உற்பத்தி நிறுவனங்கள், தங்களது நிறுவன வளர்ச்சிக்காக சிந்தெடிக் சுகர் எனப்படும் ஒருவித செயற்கை சர்க்கரைப் பாகைச் பயன்படுத்திவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் குறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் நச்சுக் குழுவின் திட்ட இயக்குநர் அமித் குரானா கூறுகையில், “நாங்கள் கண்டுபிடித்தது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவில் கலப்படம் செய்யப்பட்ட வர்த்தகம் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. சர்க்கரைப் பாகு கலந்த தேனை உண்ணும்போது உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால், தேனுடைய தரம் குறித்த கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை மத்திய அரசு நெறிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பொதுவாக, இந்தியாவில் சுத்தமான தேன் என்று விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய இந்த பரிசோதனை தேவையில்லை. ஆனால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் நிச்சயம் இந்தப் பரிசோதனையில் வெற்றி பெற்றாக வேண்டும்.