india

img

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்திய உயர்கல்வி கவுன்சில் மாற்றியமைக்கப்படும்: பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்

புதுதில்லி, மார்ச் 14- தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்திய உயர் கல்விக் கவுன்சில் மாற்றியமைக்கப்பட இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. திங்கள் அன்று கேள்வி நேரத்தின்போது மக்களவையில், பி.ஆர்.நடராஜன், பல்கலைக்கழக மானிய குழுவினுடைய(UGC) இடத்தில், இந்திய உயர் கல்வி கவுன்சிலின் செயல்பாடுகளில், கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் கொள்கை கட்டமைப்புகள் ஆகியவற்றை அரசு கொண்டு வந்துள்ளதா என்றும்,

அப்படியெனில், அதன் பகுதிகள் மற்றும் உயர் கல்வி முறையின் மீது அதன் கட்டுப்பாடுகள் ஆகியவற்றோடு கூடிய அதன் விபரங்கள் என்ன என்றும், பராமரிப்பிற்காக முன்மொழியப்பட்டுள்ள நிதி முறைகள் மற்றும் மனிதவளம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என்ன என்றும், இந்தக் கொள்கை கட்டமைப்பில், அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கை மற்றும் கட்டாய இலவச கல்வி திட்ட உரிமை ஆகியவற்றிற்கான வாய்ப்புகள் உள்ளதா என்றும், அப்படியெனில், அதன் விபரங்கள் மற்றும் இல்லை எனில் அதற்கான காரணங்கள் என்ன என்றும், கேட்டிருந்தார்.

இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார், ஒழுங்குபடுத்துதல், அங்கீகாரம், நிதியுதவி மற்றும் கல்வித்தர  நிர்ணயம் ஆகிய நான்கு சுதந்திரமான நிலைகளில்,  தனித்துவமான செயல்களை அவற்றில் மேற்கொள்ளும் வகையில்,  ஒரே குடையின் கீழ் உள்ள விதத்தில், இந்திய உயர் கல்வி குழுவினை ஏற்படுத்தும் சிந்தனையை 2020  தேசிய கல்விக் கொள்கை கொண்டுள்ளது என்றும், அதன்படி, இவ்வகையான இந்திய உயர்கல்வி குழுவினை ஏற்படுத்தும் விதத்திலான சட்டமுன்வடிவினை உருவாக்கும் பணியில் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

(ந.நி.)