india

img

தனியார்மயத்தை நிறுத்துக.... வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்துக... டிச.30 நாடு முழுவதும் கிளர்ச்சிப் போராட்டம்... சிஐடியு அறைகூவல்....

புதுதில்லி:
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதை நிறுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை அதிகப்படுத்தி, கவுரவமான வேலை வழங்க வேண்டும் என்று உழைக்கும் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற  வலியுறுத்தி  டிசம்பர் 30 அன்று ஒன்றிய அளவிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திடுமாறு சிஐடியு மத்திய செயற்குழு கூட்டம் அறைகூவல் விடுத்துள்ளது.

நாசகர வேளாண் சட்டங்கள், மின்சார திருத்தச் சட்டமுன்வடிவை ரத்து செய்யும் வரை போராட்டங்களை உக்கிரப்படுத்திட உறுதியுடன் தீர்மானித்திருக்கிற கூட்டு விவசாய இயக்கத்திற்கு சிஐடியுவின் விரிவடைந்த செயற்குழுக் கூட்டம் பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.சிஐடியு-வின் விரிவடைந்த மத்திய செயற்குழுக் கூட்டம் டிசம்பர் 21-22 ஆகிய தேதிகளில் புதுதில்லியில் உள்ள பி.ஆர். பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் நடைபெற்று வரும்  விவசாயிகளின் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாஜக அரசின் அம்பானி - அதானி போன்ற கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகளுக்குப் பயன் அளிக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய விரோத, தொழிலாளர் விரோத, தேசவிரோதக் கொள்கைகளுக்கு எதிராக விவசாய சகோதர-சகோதரிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு சிஐடியு தன் ஒருமைப்பாட்டையும், ஆதரவையும்   மீண்டும் உறுதிப்படுத்தியது.நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் அனைத்தையும் மீறி நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்களை சிஐடியு-வும் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்க இயக்கமும் ஆதரித்துக் கொண்டிருக்கின்றன.  

விவசாயிகளின் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்ற சிஐடியு
இந்திய தொழிலாளர் வர்க்கம், 2020 ஆகஸ்ட் 9 அன்றும், செப்டம்பர் 25 அன்றும் விவசாயிகளின் கூட்டு மேடையின் அறைகூவலுக்கிணங்க நடைபெற்ற அகில இந்திய எதிர்ப்பு நாள் நிகழ்வுகளுக்கு தன்னுடைய ஒருமைப்பாட்டை விரிவாக்கியிருக்கிறது. நவம்பர் 5 அன்று விவசாய அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பங்கேற்றார்கள். மத்தியத்  தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை சார்பாக நவம்பர் 26 அன்று நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தத்தின்போது முன்வைக்கப்பட்ட முக்கியகோரிக்கைகளில், மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதும் ஒன்றாகும்.பொது வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு வேலைகளுடன், சிஐடியு குழுக்கள் விவசாயிகளின் போராட்டங்களுக்கான ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டன. வேலை நிறுத்தம் முடிவடைந்தவுடனேயே, அவர்கள் தில்லிக்குப் பேரணிக்காக வந்துகொண்டிருந்த விவசாயிகளைத் தடுத்து நிறுத்திட பாஜக அரசாங்கம் மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன்பின்னர், ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ அறைகூவல்கள் அனைத்திற்கும்,  அது டிசம்பர் 8 பாரத்பந்த்திற்கானதாக இருந்தாலும் சரி அல்லது சுங்கச் சாவடிகளின் முன்பான கிளர்ச்சிப் போராட்டங்களானாலும் சரி, ரிலையன்ஸ் மால்கள் மற்றும் பெட்ரோல் பம்புகளுக்கு எதிரான போராட்டங்களாக இருந்தாலும் சரி, அவற்றில், நாடு முழுவதும் உள்ளசிஐடியு குழுக்கள், ஆதரவை அளித்ததுடன் தங்களையும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டன. 

கார்ப்பரேட் எஜமானர்களுக்கு இயற்கை வளங்கள்  தாரைவார்ப்பு
வேளாண் சட்டங்கள், பாஜக அரசின்  நவீன தாராளமயக் கொள்கையின் ஓர் அங்கம் என்பதையும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானவை என்பதையும் சிஐடியு செயற்குழு  உறுதிப்படுத்துகிறது. வேளாண்சட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக – முதலாளிகள் நலச்சட்டங்களாக மாற்றியமைத்திருத்தல், 2020மின்சார திருத்தச் சட்டமுன்வடிவு, பாதுகாப்புத் துறை மற்றும் ரயில்வே உற்பத்திப் பிரிவுகளைக் கார்ப்பரேட்மயமாக்குதல், பொதுத்துறைநிறுவனங்கள் அனைத்தையும் தனியார்மய மாக்குதல் என அனைத்தும் நம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை அடகு வைத்து, நம் நாட்டின் இயற்கை வள ஆதாரங்களையும் செல்வத்தையும்,  அந்நிய மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட் எஜமானர்களுக்கு மடைமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளேயாகும்.    கடந்த 25 நாட்களுக்கும் மேலாக வீரத்துடன் நடைபெற்று வரும் விவசாயிகளின் உறுதியான போராட்டம் இனியும் ஆட்சியாளர்களின் தேச விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை சகித்துக்கொள்ள முடியாது என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகும். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் அரசாங்கம்நிறைவேற்றியுள்ள தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை யையும், மின்சார திருத்தச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையையும் இணைத்து, தொழிலாளர்களை  மேலும் அணிதிரட்டக்கூடிய விதத்தில் போராட்டத்தை வலுப்படுத்திட சிஐடியு தீர்மானித்திருக்கிறது.  

ஜன.7-8ல் சிறை நிரப்பும் போராட்டம் ஜன.15 முதல் பிரச்சாரப்பயணம்
இத்துடன் தனியார்மயத்தை நிறுத்தக் கோரியும், முறைசாராத் தொழிலாளர்களுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் மாதந்தோறும் 7500ரூபாய் பணம் வழங்கக் கோரியும், ஒவ்வொரு மாதத்திற்கும் தலா ஒருவருக்கு 10 கிலோ உணவுதானியங்கள் அளிக்கக் கோரியும், வேலை வாய்ப்பை அனைவருக்கும் உத்தரவாதப்படுத்தக் கோரியும், அனைவருக்கும் இலவசமாக சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு அளிக்கக் கோரியும், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துதல் மற்றும் கவுரவமான வேலை போன்ற உழைக்கும் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சிஐடியு, டிசம்பர் 30 அன்று ஒன்றிய அளவிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திடவும், 2021 ஜனவரி 7-8 தேதிகளில் மாவட்ட அளவில் சிறை நிரப்பும் போராட்டம் உட்பட தீவிரமான ஆர்ப்பாட்டங்களை  மேற்கொள்ளவும், ஜனவரி 15 முதல் மாநில அளவில் அனைவரையும் அணிதிரட்டக்கூடிய விதத்தில் பயணங்களை  (ஜாதாக்கள்) மேற்கொண்டிடவும் தீர்மானித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சுயேச்சையாகவும், இதர சங்கங்களுடன் இணைந்தும் மேலும் பல்வேறு போராட்டங்களை உக்கிரப்படுத்திடவும் தீர்மானித்திருக்கிறது.   இந்நடவடிக்கைகளில் தொழிலாளர் வர்க்கம் முழுமையாகக் கலந்துகொண்டு, தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கக்கூடிய விதத்தில்,பலநாட்கள் வலுவாக வேலைநிறுத்தம் மேற்கொள்ளக்கூடிய விதத்தில் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சிஐடியு  அறைகூவல் விடுக்கிறது.

விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஒருமைப்பாட்டை தெரிவிப்பதுடன் , கார்ப்பரேட்டுகளுக்குப் பயன் அளித்திடும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை, உழைக்கும் மக்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய விதத்தில் மாற்றக்கூடிய விதத்தில்  தொழிலாளர்-விவசாயிகள் கூட்டுப் போராட்டங்களிலும் பங்கேற்று, எதிர்ப்பினை புதிய உச்சத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றும் சிஐடியு அறைகூவல் விடுக்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ந.நி.)

;