india

img

நிவர் புயல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்க 144 தடை உத்தரவு

நிவர் புயல் கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது, செவ்வாய்க்கிழமை காலை வலுவடைந்து புயலாக வலுவடைந்துள்ளது.மேலும், இந்தப் புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நவம்பா் 25-ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கவுள்ளது. அப்போது, மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் இன்று (24-11-2020) இரவு முதல் 26ஆம் தேதி காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். 
அத்தியாவசியப் பொருட்களான பால், மருந்தகம், பெட்ரோல் நிலையங்கள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.