headlines

img

உச்சநீதிமன்றம் அளித்த சரியான தடை

அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது ஆளும் கட்சியான அதிமுகவுக்கும், மாநில அரசுக்கு முட்டுக் கொடுத்து காப்பாற்றிக்கொண்டிருக்கும் பாஜகவுக்கும் அதிர்ச்சியாக இருக்கும் என்றே தெரிகிறது.முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட பிளவினால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. தங்களுடைய பெரும்பான்மை தகுதியின் மூலமாக அன்றி சில சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ததன் மூலமே இந்த அரசு ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதுவும் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகுகாலியாகவுள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுமாநில ஆளும் கட்சியின் பதற்றம் அதிகமாகிவிட்டது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. அடுத்து திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த 22 தொகுதிகளில் அதிமுக தோல்வியடைவது உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், தேர்தல் முடிவுக்கு பிறகு மத்தியில் மட்டுமல்ல, மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவானது. இந்த பின்னணியில்தான் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய மூவருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார், இவர்களை அவசர அவசரமாக தகுதிநீக்கம் செய்வதன் மூலமாக அதிமுக ஆட்சியைதக்கவைத்துக் கொள்வதற்கான மிகவும் மலிவான, ஜனநாயக விரோதமான உத்தியாகும் இது.மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்த மூன்று பேரைதகுதிநீக்கம் செய்து விட்டால், ஆட்சியில் தொங்கிக்கொண்டிருக்க முடியும் என்ற நப்பாசையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இடியாக இறங்கியுள்ளது. 

சபாநாயகர் தனபாலின் நடவடிக்கைகள் அவர் வகிக்கும் பொறுப்புக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. அதிமுக அரசை குறுக்கு வழியில்காப்பாற்றுவது மட்டுமே அவரது பணியாக உள்ளது. சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான மனு தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.முற்றிலும் சட்ட விரோதமாகவே நடந்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் செயல்பாடுகளுக்கு மட்டுமின்றி, சபாநாயகரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் உச்சநீதிமன்ற தடை முட்டுக்கட்டை போடுவதாக அமைந்துள்ளது. தங்களது அரசை காப்பாற்றிக் கொள்ள மோடிவகையறாவை நம்பியுள்ள எடப்பாடி பழனிசாமிவகையறா பெரும்பான்மை இல்லாத அரசைஇனியும் நகர்த்திச் செல்ல முடியாது என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மக்களும் இதை உறுதி செய்ய வேண்டும்.

;