புதுதில்லி:
நாடு முழுவதும் 42 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்து மூலம் பதில்அளித்துள்ளார். அதில், 42 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஜம்மு-காஷ்மீரில் 2018 மற்றும் 2020 க்கு இடையில் 635 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் 115 பொதுமக்கள் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத வன்முறையால் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன்கீழ் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட 42 தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர்அப்பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் குறைந்துள்ளது.காஷ்மீரில் 2019-ல் 594 முறை தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இது 2020-ல்244-ஆகக் குறைந்துள்ளது. 2019-ல் 157 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2020-ல் 221 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.மற்றொரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், “கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 61 முறையும், இந்தியா-வங்கதேச எல்லைப் பகுதியில் 1,045 முறையும், இந்தியா-நேபாள எல்லைப் பகுதியில் 63 முறையும்ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது” என்று தெரிவித்தார்.