கவராட்டி:
கேரளத்தைச் சேர்ந்த இடது ஜனநாயக முன்னணி எம்.பி.க்கள் குழு லட்சத்தீவுக்கு வர, நிர்வாகி பிரபுல் ஹோடா படேல் தடை விதித்துள்ளார்.
பாஜக முன்னாள் அமைச்சர் பிரபுல் ஹோடா படேல், லட்சத்தீவின் நிர்வாகி நியமிக்கப்பட்ட நாள் முதலே அங்குள்ள அமைதியைக் குலைத்து வருகிறார்.மதுபான விற்பனைக்கு அனுமதி, பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவில் இறைச்சிக்குத் தடை, புதிய தடுப்புக் காவல் சட்டம், பஞ்சாயத்து அமைப்புக்களின் அதிகாரம் பறிப்பு, கடற்கரை மீனவர் குடியிருப்புகளுக்குத் தடை என்று ஏராளமான மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு எதிராக போராடும் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், திரைக்கலைஞர்கள் மீது தேசத்துரோக பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில்தான், பிரபுல் ஹோடா படேலின் நடவடிக்கைகள் மீது அங்குள்ள மக்களின் கருத்தைக் கேட்டறிவதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடதுசாரிக் கட்சி எம்.பி.க்கள் 8 பேரைக் கொண்ட குழு லட்சத்தீவு செல்வதாக இருந்தது.ஆனால், அதற்கு லட்சத்தீவு காவல்துறை தடை விதித்துள்ளது. “நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை உள்ளூர் மக்கள், அரசியல் கட்சிகளை தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வழிவகுக்கும் என்பதாலும், கொரோனா பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதாலும் அனுமதி மறுக்கப்படுகிறது” என்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.ஏற்கெனவே 3 பேர் கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் இதே போல தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.