ஜிஎஸ்டி வரி மாற்றமும், தொடரும் கேள்விகளும்
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் ஒவ்வொரு குடும்பமும் பலனடையும் என்று ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அப்படி யென்றால் பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டது என்பதை அவர் ஒப்புக் கொள்கி றார் என்று பொருள்.
அத்தியாவசியப் பொருள் அனைத்துக்கும் தாறுமாறாக ஜிஎஸ்டி வரி விதித்து தொடர்ந்து உயர்த்தியபோது இதற்கும் ஒன்றிய அரசுக்கும் தொடர்பில்லை; இது ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு என்று பாஜக ஆட்சியாளர்கள் ஒதுங்கிக் கொண்ட னர். ஆனால் இப்போது வரி சீர்திருத்தம் மேற் கொள்ளப்பட்டிருப்பது பிரதமர் மோடியின் சாதனை என்றும், இந்த சீர்திருத்தத்தை விளக்கி நாடு தழுவிய பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதா கவும் பாஜக அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு அரசு விலை தீர்மானிக்கும் முறையை விலக்கி கொண்டபோது, இனிமேல் சர்வதேச சந்தை விலை நிலவரத்திற்கேற்ப பொதுத்துறை எண் ணெய் நிறுவனங்களே எரிபொருள் விலையை தீர்மானிக்கும் என்றார்கள். ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்த போதும், உள்நாட்டுச் சந்தையில் விலை குறையவில்லை. வரி மேல் வரி போட்டு கச்சா எண்ணெய் விலை சரிவின் பலன் மக்களுக்கு கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் தேர்தல் காலத்தில் மட்டும் விலை உயராமலும் பார்த்துக் கொண்டார்கள். எனவே சந்தை தான் விலையை தீர்மானிக்கிறது என்ற வாதம் வெறும் வார்த்தைஜாலம் என்பது தெளிவானது.
இந்நிலையில், ஜிஎஸ்டி மறு சீரமைப்பு மக்க ளுக்கான தீபாவளி பரிசு என்று பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் தம்பட்டமடிக்கிறார்கள். ஆனால் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் ஏற்படும் பாதிப்பு குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள்.
புதிய முறையால் பல்வேறு மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும். கேரள அரசுக்கு ரூ.8ஆயிரம் கோடி முதல் 10 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற் படும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படப் போகிறது. ஆனால் இதை ஈடுகட்டுவது குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்கவில்லை.
மாநில தேர்தல்களை மனதில் கொண்டு அறி விக்கப்பட்டுள்ள இந்த வரி மாற்றம் பொது மக்க ளுக்கு எந்தளவு பலனளிக்கும் என்பது குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் பல்வேறு குறை பாடுகள், குளறுபடிகள் இருப்பதை சுட்டிக்காட்டிய போது ஒன்றிய ஆட்சியாளர்கள் ஏற்க மறுத்தனர். 8 ஆண்டுகளாக மக்களை கசக்கிப் பிழிந்துவிட்டு தற்போது வரியை குறைத்துவிட்டோம் என்பது வெறும் ஏமாற்றுவேலை. பீகார் உள்ளிட்ட மாநி லங்களிலும் வாக்காளர் பட்டியல் மோசடி, வாக்குத் திருட்டு போன்றவற்றை திசை திருப்ப ஒன்றிய அரசு முயல்கிறது. ஆனால் இது பலனளிக்கப் போவதில்லை.